Published : 06 Jan 2020 01:59 PM
Last Updated : 06 Jan 2020 01:59 PM

பூக்கள் சப்ளை செய்த பாக்கித் தொகையை வசூலித்துத் தரக் கோரிய வழக்கு: ஆளுநர் மாளிகையிடம் விளக்கம் கேட்டு அளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக ஆளுநராக கே.ரோசய்யா இருந்தபோது வாங்கிய பூக்களின் பாக்கித் தொகை 1 லட்சத்து 82 ஆயிரத்தை வட்டியுடன் தர உத்தரவிடக் கோரிய வழக்கில் ஆளுநர் மாளிகையிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பம்மலைச் சேர்ந்த ஸ்டெர்லிங் ஃப்ளவர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான பஷீர் அகமது உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அவரது மனுவில், “கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ் பவனுக்கு பூக்கள், கலப்பினப் பூக்கள், அலங்காரப் பொருட்கள் என சப்ளை செய்து வந்ததுள்ளேன்.

தமிழக ஆளுநராக கே.ரோசய்யா இருந்தபோது 2014 டிசம்பர் மாதம் முதல் 2015 ஜூன் வரை பூக்கள் சப்ளை செய்ததில் 8 ரசீதுகளுக்கான 2 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் நீண்ட நாட்களாக நிலுவைத் தொகை வைக்கப்பட்டது. பணம் வராதது குறித்து பலமுறை கேட்ட பிறகு ஒரு லட்ச ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது. மீதமுள்ள 1 லட்சத்து 82 ஆயிரத்தை மீண்டும் நிலுவையில் வைத்துள்ளார்கள்.

கடனுக்கு வாங்கி சப்ளை செய்த எனக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து பெருந்தொகை வராததால் எனக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியாலும், நஷ்டத்தாலும் ஆளுநர் மாளிகைக்கு பூக்கள் விற்பதை நிறுத்தி விட்டேன். அதன் பின்னரும், இது தொடர்பாக ஆளுநர் மாளிகைக்குப் பலமுறை கடிதம் அனுப்பியும் எந்தவித பதிலும் இல்லை. ஆகவே பூக்கள் வாங்கியதற்கான நிலுவைத்தொகை ஒரு லட்சத்து 82 ஆயிரத்தை ஆண்டுக்கு 10.5 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை ஆளுநர், ஆளுநரின் துணை செயலாளர், ஆளுனரின் கணக்காயர் ஆகியோரிடம் விளக்கம் பெற்று, தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x