Published : 06 Jan 2020 01:26 PM
Last Updated : 06 Jan 2020 01:26 PM

69% இட ஒதுக்கீடு கொள்கைக்குப் பாதுகாப்பு; இடைநிற்றல் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி: ஆளுநர் உரையின் சிறப்பம்சங்கள்

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று (ஜன.6) ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 15-வது சட்டப்பேரவையின் 8-வது கூட்டம் மற்றும் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.

ஆளுநர் உரையின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள்:

''மாமல்லபுரத்திற்குச் சிறப்புச் சுற்றுலா நிதி வழங்க பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார். ரூ.563.30 கோடிக்கான மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டுத் திட்ட வரைவை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஜிஎஸ்டி இழப்பீடாக இந்த ஆண்டு தமிழகத்திற்கு சுமார் ரூ.7,000 கோடியை வழங்கியது மத்திய அரசு.

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நிலுவைத்தொகை விரைவில் கிடைக்கும் என நம்பிக்கை.

கர்நாடகா, காவிரியின் குறுக்கே எந்த விதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தல்.

பெண்ணையாற்றுப் படுகையில், மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே, நீர்த்தேக்கம் அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் ஒப்புதலின்றி கர்நாடக அரசு பெண்ணையாற்றுப் படுகையில் நீர்த்தேக்கம் அமைக்கக்கூடாது என வலியுறுத்தல்.

தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று சரியான தருணத்தில் ஆந்திர முதல்வர் கிருஷ்ணா நதி நீரைத் திறந்து விட்டதற்கு நன்றி.

பரம்பிக்குளம் - ஆழியாறு பிரச்சினையைத் தீர்க்க கேரள முதல்வரை தமிழக முதல்வர் சந்தித்துப் பேசியதற்கு பாராட்டுகள்.

முதல் கட்டமாக கோதாவரி ஆற்றிலிருந்து குறைந்தபட்சம் 200 டி.எம்.சி. தண்ணீரையாவது காவிரி வடிநிலத்திற்கு வழங்க வலியுறுத்தல்.

காவிரி தெற்கு - வெள்ளாறு இணைப்புத் திட்டம் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.

சிறந்த நீர் மேலாண்மை காரணமாக இந்த ஆண்டு பயிரிடும் பரப்பளவு 7 லட்சம் ஏக்கர் வரை அதிகரித்துள்ளது.

தமிழக உணவு தானிய உற்பத்தி 115 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயக் காப்பீடு மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் தமிழக விவசாயிகள் ரூ.7,200 கோடி பெற்றுள்ளனர்.

சேலம் தலைவாசலில் ரூ.1,000 கோடி மதிப்பிலான கால்நடை ஆராய்ச்சிக்கான மேம்பட்ட ஒருங்கிணைந்த கல்வி நிறுவனத்திற்கு விரைவில் ஒப்புதல்.

மூக்கையூர் மற்றும் குந்துக்கல்லில் முறையே ரூ.1.20 கோடி மற்றும் ரூ.100 கோடியில் மீன்பிடித் துறைமுகம் கட்டி முடிக்கப்பட உள்ளன.

நாகை வெள்ளக்குப்பத்தில் ரூ.100 கோடி செலவில் மீன்பிடித் துறைமுகம் அமைய உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கும் 50% பங்கு மூலதனத் தொகையை மத்திய அரசு வழங்க வலியுறுத்தல்.

தாம்பரம்-வேளச்சேரி வழித்தடத்தில் 15.5 கி.மீ. நீளத்திற்கு ரயில் போக்குவரத்து முறை ஒன்றினை அரசு அமைக்கும். இதற்கான விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தயாரிக்கும்.

சென்னை நகரின் பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைத்து, தடையற்ற போக்குவரத்தை வழங்க புதிய திட்டம்.

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வரின் சிறப்புக் குறைதீர் முகாம் மூலம் 9.77 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றுள் சுமார் 5 லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் மூலம் மக்கள் அரசு திட்டங்களை எளிதாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளன.

தமிழ் மொழி மற்றும் தமிழக கலாச்சாரத்தை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டு வரும் நினைவிடப் பணிகள் மிக விரைவில் முடிவடையும்.

நவ.1-ம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்து கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

சமய வேறுபாடின்றி தமிழக மக்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படும்.

மதுரை காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்தை ஒப்புயர்வு கல்வி மையமாக உருவாக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.

பொங்கல் கொண்டாட ஏழை மக்களுக்கு ரூ.1,000 வழங்க உத்தரவிட்டுள்ள முதல்வருக்குப் பாராட்டு.

கணினிமயப்படுத்தப்பட்டுள்ளதால் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை தமிழக அரசால் நடைமுறைப்படுத்த முடிகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு மூலமாக 10.5 லட்சம் நபருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் முதலீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உலக முதலீட்டாளர் மாநாட்டுக்குப் பிறகு 63 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

முதல்வர் ஏற்கெனவே அறிவித்துள்ளதன்படி, ஏழைக் குடும்பங்களுக்கு விலையில்லா கொசு வலை வழங்கப்படும்.

சென்னை மாநகரக் கூட்டாண்மை என்ற தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்த அரசு உத்தேசம்.

9 புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கான பணிகள், ரூ.3,267 கோடி செலவில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ளன.

மாநிலம் முழுவதும் பிராட்பேண்ட் சேவை வழங்க ரூ.1,815 கோடி மதிப்பிலான பாரத் நெட் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு, நம்பிக்கை இணையம் (blockchain), பொருட்களின் இணையம் (internet of things), தரவுப் பகுப்பாய்வு (data analytics) போன்றவை மூலம் TNEGA சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை.

ரூ.2,000 கோடி மதிப்பில் தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது.

2019-2020 நிதியாண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.12,500 கோடி கடன் வழங்க இலக்கு.

ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவ காவலன் செயலி திட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு ஆண்டின் மூலம் தகுதியான 5 லட்சம் நபர்களுக்கு கூடுதலாக சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம்.

அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்புயர்வு கல்வி நிறுவனமாக இந்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. ஒப்புயர்வு கல்வி நிறுவனம் ஆன பின்னரும் அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து மாநில சட்டத்தில் இயங்கும்.

அண்ணா பல்கலை.க்கு மாநில இட ஒதுக்கீடு கொள்கை தொடர்ந்து பொருந்தும் என இந்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட 5 அமைச்சர்களைக் கொண்ட குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் உரிய முடிவு.

கல்லூரி இடைநிற்றல் மாணவர்களில் 1 லட்சம் மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வழங்கப்படும்.

ஒய்வூதியம் பெறுவதற்கான அசையா சொத்து மதிப்பு வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வரையிலான அசையா சொத்து கொண்டவர்கள் தற்போது ஓய்வூதியம் பெறத் தகுதியானவர்கள்.

தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு கொள்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தகுதியான பணியிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன’’.

இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x