

அரக்கோணம் மற்றும் சங்கரன்கோவில் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பாணாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி நேசன். இவரது மகள் அஸ்வினி (15). அதேபகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த உலகநாதன் மகள் ஜெயஸ்ரீ (10), அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால், பாணாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரிக்கு துணி துவைக்க அஸ்வினியும், ஜெயஸ்ரீயும் சென்றனர். அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த சிறுவன் தமிழரசன் (7) என்பவரும் சென்றார். ஏரிக்கரையில் அஸ்வினியும், ஜெயஸ்ரீயும் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தபோது ஏரியில் இறங்கிய தமிழரசன், திடீரென நீரில் மூழ்கினார். இதைக்கண்ட அஸ்வினியும், ஜெயஸ்ரீயும் சிறுவனை காப்பாற்ற நீரில் இறங்கினர். ஆழமான பகுதிக்கு சென்றதால் 3 பேரும் நீரில் மூழ்கி இறந்தனர்.
அரக்கோணம் தீயணைப்பு துறையினர்நீரில் மூழ்கிய 3 பேரின் சடங்களையும் மீட்டனர். இதைத்தொடர்ந்து, 3 பேரின் உடல்களும் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. மற்றொரு சம்பவம் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா. கரிவலம் வந்தநல்லூர் அருகே உள்ள பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுபொன்னையா (38). இவரது மனைவி இந்திரா(34). இவர்களது மகள் சுமித்ராதேவி (11), மகன் மகேந்திர பிரசாத் (9). சுமித்ரா அருகில் உள்ள ராமநாதபுரத்தில் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை இந்திரா தனது மகள், மகனுடன் பனையூரில் உள்ள குளத்துக்கு துணிகளை சலவை செய்ய சென்றார். இவர்களுடன் பனையூரைச் சேர்ந்த அனந்தம்மாள் செல்வி (31) என்பவரும் சென்றுள்ளார். அப்போது குளத்தில் குளித்த சுமித்ராதேவி ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கினார். இதைப் பார்த்த இந்திரா, மகளை காப்பாற்ற முயன்றபோது அவரும் நீருக்குள் மூழ்கினார்.
இவர்கள் இருவரையும் காப்பாற்றுவதற்காக முயன்ற அனந்தம்மாள் செல்வியும் தண்ணீரில் மூழ்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மகேந்திர பிரசாத், ஊருக்குள் வேகமாக ஓடிச்சென்று கிராமத்தினரை அழைத்து வந்துள்ளார். அவர்கள் குளத்தில் இறங்கி தேடி, இறந்த நிலையில் 3 பேரின் உடல்களையும் மீட்டனர்.
இந்த துயர சம்பவம் குறித்துதகவல் அறிந்த அமைச்சர் ராஜலெட்சுமி, வாசுதேவநல்லூர் எம்எல்ஏ மனோகரன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.