

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் மாவட்ட வழங்கல் அலுவலரை அதிமுக எம்எல்ஏ ஒருமையில் பேசியது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.
புதுக்கோட்டை காமராஜபுரத்தில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், ரேஷன்கார்டுதாரர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ ஆறுமுகம் உள்ளிட்டோர் பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினர்.
அப்போது, அமைச்சருடன் மேடையில் இருந்த எம்எல்ஏ ஆறுமுகம், தனக்கு அருகில் நின்ற மாவட்ட வழங்கல் அலுவலர் அக்பர் அலியைஒருமையில் பேசி, அவரை மேடையை விட்டு கீழே இறங்குமாறு கூறினார். ஆறுமுகத்துக்கு ஆதரவாக அதிமுக நகர செயலாளர் பாஸ்கரும் பேசினார்.
அப்போது, உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக அக்பர் அலி செயல்படுவதாக குற்றம்சாட்டினர். அவர்களை அங்கிருந்த அதிமுகவினர் அமைதிப்படுத்தினர். எம்எல்ஏவின் பேச்சால் அதிர்ச்சியடைந்த மாவட்ட வழங்கல் அலுவலர் அக்பர் அலி அங்கிருந்து வெளியேறினார். ஆனால், இதை மேடையில் இருந்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கண்டுகொள்ளவில்லை.
இதுகுறித்து விசாரித்தபோது, ‘‘உள்ளாட்சித் தேர்தலில் குன்றாண் டார்கோவில் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் கீரனூரில் எண்ணப்பட்டன. அங்கு தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலர் அக்பர் அலி இருந்துள்ளார். அப்போது, 3-வது வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட த.செல்வத்துக்கு அதிகவாக்குகள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் லெ.முத்து சுப்பிரமணியன்தான் அதிகவாக்குகள் பெற்றதாகவும், அவரையே வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனவும் அதிமுக எம்எல்ஏ ஆறுமுகம் உள்ளிட்டோர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால், அன்றைய தினம் முடிவு அறிவிக்கப்படவில்லை. மறுநாள் மீண்டும் வாக்குகள் சரிபார்க்கப்பட்டு திமுக வேட்பாளர் செல்வம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதில் ஏற்பட்ட விரக்தியில்தான் அரசு விழாவில் மாவட்ட வழங்கல் அலுவலரிடம் எம்எல்ஏ ஆறுமுகம் உள்ளிட்டோர் இவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.