

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 28 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு ஜன.10 முதல் 25 வரை 15 நாள் பரோல் வழங்கி உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுக்கு மேலாக மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் ரவிச்சந்திரனை பரோலில் விடுதலை செய்யக்கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன்,நளினி, முருகன், சாந்தனு, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்,ரவிச்சந்தின் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுனருக்கு பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்த தீர்மானத்துக்கு ஆளுனர் ஒப்புதல் வழங்காமல் உள்ளார். இதனால் அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுனர் முடிவெடுக்கும் வரை ரவிச்சந்திரனை பரோலில் விடுதலை செய்ய வழக்கு தொடர்ந்தேன்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ரவிச்சந்திரனுக்க 30 நாட்களுக்கு குறைவாக பரோல் வழங்க தயாராக இருப்பதாக சிறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி ஒரு மாத பரோல் கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால் ரவிச்சந்திரனுக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் இருப்பதால் பரோல் வழங்க மறுத்து கடந்தாண்டு நவம்பர் மாதம் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
அதே நேரத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், ராபர்ட் பயாஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு மாத சாதாரண விடுப்பு வழங்கியுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு மதுரை சிறைத்துறை கண்காணிப்பாளர் உத்தரவை ரத்து செய்து ரவிச்சந்திரனுக்கும் ஒரு மாதம் சாதாரண விடுப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி. ராஜா, பி.புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் லஜபதிராய், திருமுருகன் ஆகியோர் வாதிட்டார். சிறைத்துறை டிஐஜி டி.பழனி பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் முன்விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழக ஆளுனர் முன்னுள்ளது. இதை காரணமாக வைத்து மனுதாரர் தனது மகனுக்கு பரோல் கேட்க முடியாது.
சிலருக்கு நீண்ட நாள் பரோல் வழங்கியதை குறிப்பிட்டு மனுதாரர் தனது மகனுக்கு பரோல் கேட்டுள்ளார். மனுதாரர் மாவோயிஸ்ட் இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கு நீண்ட நாள் பரோல் வழங்கியதை உதாரணமாகக் கூறியுள்ளார். அந்த சம்பவம் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. ஒரு வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவு மற்றொரு வழக்கிற்கு பொருந்தாது.
ரவிச்சந்திரனின் வீடு அதிக மக்கள் நெருக்கடி உள்ள இடத்தில் உள்ளது. அவரது வீடு பாதுகாப்பு இல்லாதது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் அடுத்து நடைபெறவுள்ள போலீஸ் ஏட்டு தேர்வு, பல்வேறு உணர்வுபூர்வமான நிகழ்வுகள், மே மாதம் வரை 7 மாதங்களுக்கு நடைபெறும் கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்களுக்கு போலீஸ் பாதுாப்பு வழங்க வேண்டியது இருப்பதால் பரோல் காலத்தில் ரவிச்சந்திரனுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது.
மனுதாரரின் மகன் சம்பந்தப்பட்ட வழக்கு முக்கியமானது. இதுபோன்ற முக்கிய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது காவல்துறையின் கடமையாகும். பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியதை பொருத்தவரை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் அளித்த உறுதிமொழி அடிப்படையில் அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. அந்த உறுதிமொழி பேரறிவாளன் வழக்கை ஒத்த மற்றொரு வழக்கிற்கு பொருந்தாது. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.ராஜா, புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் ரவிச்சந்திரனுக்கு ஜன.10 முதல் 25 வரை பரோல் விடுமுறை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.