

குரூப்-4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தின் 2 மையங்களில் தேர்வெழுதியவர்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.
குரூப்-4 தேர்வு கடந்த செப்.1-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 16 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில், குரூப்-4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து குரூப்-4 தேர்வர்கள் சிலர் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் 1,606 பேரும் கீழக்கரை மையத்தில் 1,608 பேரும் தேர்வெழுதினர். இந்த இரு மையங்களில் தேர்வு எழுதியவர்கள்தான் மாநில அளவில் முதல் 15 இடங்களைப் பிடித்துள்ளனர். மேலும், மாநில அளவில் முதல் 100 இடங்களுக்குள் 40 பேர் வரைதேர்ச்சி பெற்றுள்ளனர். இது தேர்வர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இந்த மையங்களில் தேர்வெழுதியவர்களில் பலர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
இதுதவிர, ஏற்கெனவே கமுதி வட்டாட்சியர் மீனலோசனம் குரூப்-4 தேர்வுக்கு கூடுதலாக வழங்கிய ஓஎம்ஆர் விடைத்தாள்களை தாமதமாக 10 நாட்களுக்கு பின்னரே டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பாக மீனலோசனத்திடம் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வெழுதியவர்களே அதிக அளவு தேர்ச்சி பெற்றிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இந்த விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்தப் புகார் குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தற்போதுதான் புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’என்றனர்.