

கோயம்பேடு சந்தைக்கு வெங்காயம் வரத்து அதிகரிப்பு காரணமாக அதன் விலை கிலோ ரூ.50 ஆக குறைந்துள்ளது.
ஆந்திரா வெங்காயம் வருகை காரணமாக, அந்த சந்தையில் வெங்காயத்தின் விலை குறையத் தொடங்கியது. கடந்த வாரம் கிலோ ரூ.90-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது வெங்காயம் வரத்து அதிகரித்ததன் காரணமாக அதன் விலை கிலோ ரூ.50 ஆக குறைந்துள்ளது. திருவல்லிக்கேணி ஜாம்பஜார், பெரம்பூர் சந்தைகளில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் கிலோ ரூ.65-க்கு விற்கப்பட்டு வருகிறது.
கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான தக்காளி, பீட்ரூட், புடலங்காய் தலா ரூ.20, சாம்பார் வெங்காயம் ரூ.120, கத்தரிக்காய், பாகற்காய் தலா ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.33, அவரைக்காய், வெண்டைக்காய் தலா ரூ.30, முள்ளங்கி, முட்டைக்கோஸ் தலா ரூ.10, பீன்ஸ் ரூ.35, கேரட் ரூ.60, முருங்கைக்காய் ரூ.160, பச்சை மிளகாய் ரூ.15 என விற்கப்பட்டு வருகிறது.
வெங்காய விலை குறைந்து வருவது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறும்போது “கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக தினமும் 70 லோடு வெங்காயம் வரும். கடந்த இரு மாதங்களாக 30 லோடாக குறைந்திருந்தது. தற்போது 55 லோடுகளுக்கு மேல் வருகிறது. வரத்து அதிகரிப்பால் அதன் விலை குறைந்துள்ளது. அடுத்து வரும் வாரங்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளது” என்றனர்.