

சென்னையில் மழைநீர் சேகரிப்பு பணியில் சிறப்பாகச் செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் குடியிருப்போர் நல சங்கங்களுக்கு, வரும் குடியரசு தினத்தன்று ‘நீர் பாதுகாவலர்’ பாராட்டுச் சான்றிதழ் வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகள், அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், தொழிற்சாலைகளில் அமைக்கப்பட்டுவரும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்து சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரிய அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் த.ந.ஹரிஹரன் ஆகியோர் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பேசியதாவது:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் ஆகியவை இணைந்து சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்கள் மூலம் சென்னையில் இதுவரை 3 லட்சத்து 15 ஆயிரத்து 276 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 421 கட்டிடங்களில் ஏற்கெனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் நல்ல நிலையில் உள்ளன. மேலும், 21 ஆயிரத்து 582 கட்டிடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. 25 ஆயிரத்து 394 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புதியதாக அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநகராட்சி நடவடிக்கையால் ஏற்கெனவே 41 ஆயிரத்து 694 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
330 சமுதாய கிணறுகள்
இவ்விரு நிர்வாகங்களின் நடவடிக்கையால் பயன்பாடற்று இருந்த 330 சமுதாய கிணறுகள் தூர்வாரி புனரமைக்கப்பட்டுள்ளன. மேலும், இக்கிணறுகளுக்கு அருகிலுள்ள வணிகக் கட்டிடங்கள், தனியார் கட்டிடங்களிலிருந்து மழைநீர் இணைப்பு வழங்கப்பட்டு மழைநீர் வீணாகாமல் சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்தின் அனைத்து கட்டிடங்களிலும் 100 சதவீதம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் காரணமாக சென்னையில் குறைந்த அளவே பருவமழை பெய்த நிலையிலும் நிலத்தடி நீர்மட்டம் கடந்த காலங்களைவிட வெகுவாக உயர்ந்துள்ளது. இப்பணிகளைச் சிறப்பாக மேற்கொண்ட அலுவலர்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு வரும் குடியரசு தினவிழாவில் ‘நீர் பாதுகாவலர்’ என்ற பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு ஆணையர் கோ.பிரகாஷ் கூறினார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர்கள் பி.குமாரவேல் பாண்டியன், ப.மதுசூதன் ரெட்டி, கிரேஸ் லால்ரின்டிகி பச்சுவாவ், வட்டார துணை ஆணையர்கள் பி.என்.ஸ்ரீதர், ஆல்பி ஜான் வர்கீஸ், பி.ஆகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.