

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 23-ம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்வதற்கான முகாம்கள் ஜனவரி 4, 5 மற்றும் 11, 12-ம் தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. நேற்று முன்தினம் நடைபெற்ற முகாமில் ஏராளமானோர் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான விண்ணப்பங்களை அளித்தனர்.வாக்காளர்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்டவற்றில் திருத்தங்களை செய்யவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதனிடையே, இரு இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது, இறந்தவர்களின் பெயர்கள், தந்தை என்ற இடத்தில் கணவரின் பெயர், பெண் வாக்காளருக்கு ஆண் புகைப்படம் இடம்பெற்றிருத்தல் போன்ற பல குளறுபடிகள் வாக்காளர் பட்டியலில் உள்ளன. இந்தக் குளறுபடியின் உச்சமாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் விஜயகுமார் கிழக்கு தாம்பரம், இரும்புலியூர் நடுத்தெருவில் வசிப்பதாக பெயர் மற்றும் புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஜோதிகுமார் கூறும்போது, “சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பதைத் தவிர விஜயகுமாருக்கும் தாம்பரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் அவரின் புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியாக உள்ளது. தேர்தல் ஆணையம் எத்தனை கட்டுப்பாடுகளை வகுத்தாலும் இதுபோன்ற குளறுபடிகள் நடைபெறுகிறது. இதுபற்றி தேர்தல் ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு, சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து தாம்பரம் வட்டாட்சியர் சரவணனிடம் கேட்டபோது, “வாக்காளர் பட்டியலில் விஜயகுமார் படம் இருப்பது தொடர்பாக புகார் வந்துள்ளதால் விசாரணை நடைபெற்று வருகிறது. பட்டியலில் இருந்து அவர் பெயரை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாக்காளர் பட்டியலில் இதுபோன்ற குளறுபடிகள் இருந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்” என்றார்.
- பெ.ஜேம்ஸ்குமார்