Published : 06 Jan 2020 11:19 AM
Last Updated : 06 Jan 2020 11:19 AM

நல்லவர்கள் இணைந்தால் நல்லது நடக்கும் நாளைய தமிழ்நாட்டின் தலையெழுத்து மாறும்: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

நல்லவர்கள் இணைந்தால் நல்லது நடக்கும். நாளைய தமிழ்நாட்டின் தலையெழுத்து மாறும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் எழுதிய ‘ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்' என்ற நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நேற்று நடைபெற்றது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நூலை வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பேசியது:

நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’, கண்ணதாசனின் ‘வனவாசம்’, ‘மனவாசம்’, பி.சி.கணேசனின் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ ஆகிய நூல்கள் வரிசையில் இந்த நூலும் பெருமையாக பேசப்படும். தற்போது புதிய பாதையைத் தேடும் தமிழருவி மணியனின் எண்ணம் சரியா, தவறா என்பதைக் காலம் முடிவு செய்யும். மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்.

பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது: தமிழருவி மணியன் ஒரு வழிப்போக்கனாக இருந்தால், பிரச்சினை இருந்திருக்காது. ஆனால், அவர் காந்தி காட்டிய, காமராஜர் நடந்த ஒரே வழியில் நடப்பதால்தான் இத்தனை சிரமங்களைச் சந்தித்து வருகிறார். தமிழ்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே தமிழருவி மணியனின் நோக்கம்.

யோக்கியவான்கள் அனைவரையும் நம்பியே தற்போது கடைசி முயற்சியை தமிழருவி மணியன் எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஊழலற்ற நேர்மையான ஆட்சி வருவதற்கு சாதி, மதம், மொழி ஆகியவற்றை வைத்து அரசியல் செய்வதைத் தடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் மாற்றம் என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான மாற்றமாக இருக்கும். அதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும். நல்லவர்கள் இணைந்தால் நல்லது நடக்கும். நாளைய தமிழ்நாட்டின் தலையெழுத்து மாறும். அதற்கான தொடக்க நிகழ்ச்சியாக இதைக் கருத வேண்டும் என்றார்.

தமிழருவி மணியன் தனது ஏற்புரையில் பேசியது: மாற்றுக் கருத்தை முன்வைப்பவர்களை இழித்தும், பழித்தும் பேசுவோரைக் காட்டிலும் மோசமான பாசிஸ்டுகள், சர்வாதிகாரிகள் இல்லை. மதத்தின் அடிப்படையில் வாக்களித்தால் இந்த நாடு தாங்காது. இந்தியாவின் தலைவிதியை இருவர் மட்டும் எழுத நினைப்பது தவறு. எனவே, சிறுபான்மையினரிடம் உள்ள அவநம்பிக்கையை முதலில் போக்க வேண்டும். உலகமே சுயநலமாக சுருங்கிவிட்ட பிறகு, இந்தியாவின் கதவுகளைத் திறந்து வைக்க முடியாது. குடியுரிமைச் சட்டத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால், மியான்மரில் இருந்து வரும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் குடியுரிமை தந்திருக்க வேண்டும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார். 2021-ல் தமிழ்நாட்டில் மாற்றம் வரும். பொன்.ராதாகிருஷ்ணன், ஜி.கே.வாசன் ஆகியோர் ரஜினியை ஏற்க வேண்டும். இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x