

தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய தொழில்நுட்பக் குழு அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் மொத்தம் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 3 ஆயிரத்து 350 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. மேலும், திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது.
அவற்றில் 6 கல்லூரிகளுக்கான பூர்வாங்க பணிகளுக்கு தலா ரூ.100 கோடி மற்றும் அதற்கான நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியது. அக்கல்லூரிகளுக்கான முதல்வர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களான அரியலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகியவற்றில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்குமாறு மாநில அரசு கோரிக்கை விடுத்தது. அந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பதற்கான மத்திய தொழில்நுட்பக் குழுக் கூட்டம் அண்மையில் டெல்லியில் நடைபெற்றது.
அதில் தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முதற்கட்ட அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை மத்திய சுகாதார அமைச்சகத்தின் நிர்வாகக் குழு பரிசீலிக்க உள்ளது. அதன் ஒப்புதல் கிடைக்கப்பெற்றால் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்வதுடன், நாட்டிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உருவாகும்.