Last Updated : 06 Jan, 2020 11:06 AM

 

Published : 06 Jan 2020 11:06 AM
Last Updated : 06 Jan 2020 11:06 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: கோவிந்தா.. கோவிந்தா.. கோஷங்கள் எழுப்பி பக்தர்கள் பரவசம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பத்தர்கள் குவிந்தனர். கோவிந்தா.. கோவிந்தா... கோஷங்களுக்கு நடுவே சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூ ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது பெரியாழ்வார், ஆண்டாள் என இரண்டு ஆழ்வார்கள் வாழ்ந்த பூமியாகும்.

ஆண்டாள் கோயிலில் இன்று காலை 6.30 மணி அளவில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது வில்லிபுத்தூர். கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர தேரோட்டம் மிக முக்கியமான திருவிழாவாகும். அதற்கு அடுத்தபடியாக மார்கழி மாதம் தமிழ் திருவிழாவாகிய பகல் பத்து, இராப் பத்து மற்றும் ஆண்டாள் மார்கழி நீராட ( எண்ணைக் காப்பு) உற்சவம் வருடந்தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு கடந்த டிசம்பர் 26 ம் தேதி தொடங்கி ஜனவரி 5ஆம் தேதி நேற்றுடன் பகல்பத்து உற்சவம் நிறைவடைந்தது. இராப் பத்து உற்சவத்தின் ஆரம்ப நாளான இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... என்ற கோஷங்களோடு, ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் எதிர்கொண்டு அழைக்க சொர்க்கவாசல் வழியாக பெரிய பெருமாள், தொடர்ந்து ஸ்ரீஆண்டாள், ரங்கமன்னார்' எழுந்தருளினர்.

வருடம் ஒரு முறை மட்டுமே இந்த பரமபத வாசல் திறக்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இன்று திறக்கப்பட்ட இந்த பரமபத வாசல் வழியாக வருபவர்கள் வைகுண்டத்திற்கு சென்று வருவதாக ஐதீகம்.

எனவே உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.
ஸ்ரீரங்கத்திற்கு அடுத்த படியாக முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாக ஸ்ரீ ஆண்டாள் கோயில் உள்ளதால் அங்கு சென்று தரிசனம் செய்ய முடியாதவர்கள் இங்கு சாமி தரிசனம் செய்தார்கள். சொர்கவாசல் திறந்தவுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் இன்று முதல் இராப் பத்து எனும் உற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். வரும் ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15ஆம் தேதி வரை முக்கிய நிகழ்வான மார்கழி நீராட்டு உற்சவம் ( எண்ணெய் காப்பு உற்சவம்) நடைபெற உள்ளது.

இந் நிகழ்ச்சியை காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் மதுரை டிஐஜி ஆனி விஜயா தலைமை குற்றவியல் நீதிபதி முத்து சாரதா சடகோப ராமானுஜ ஜீயர் இணை ஆணையர் தனபால் நீதிபதி சுமதி சாய் பிரியா மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பலராமன் ஸ்ரீவி கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் முத்தையா தக்கார் ரவிச்சந்திரன் செயல் அலுவலர் இளங்கோவன் சிவகாசி செயலாளர் வெள்ளைச்சாமி மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோவில் செயல் அலுவலர் ஜவகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x