வீடுவீடாக துண்டு பிரசுரம் விநியோகம்: 120 தொகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்கியது பாமக

வீடுவீடாக துண்டு பிரசுரம் விநியோகம்: 120 தொகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்கியது பாமக
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி முதற் கட்டமாக 120 தொகுதிகளில் வீடு வீடாக பிரச்சாரம் செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது.

தற்போது தமிழத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பாமக திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணி வைக்கப் போவதில்லை எனவும் 2016-ல் பாமக தலைமையில் புதிய ஆட்சி அமையும் எனவும், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் எனவும் அறிவிப்பு வெளியிட்டது.

பாமக முதல்வர் வேட்பாளராக அன்புமணி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து திமுக, அதிமுக இரு கட்சிகளையும் விமர்சித்து ஒவ்வொரு மண்டலமாக பாமக சார்பில் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

மது விலக்குப் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில் பாமகவினர் 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தற்போது தொடங்கியுள்ளனர். `2016-ல் ஆட்சி மாற்றம். முன் னேற்றத்துக்கான மாற்றம் ஏன்? எதற்கு?’ என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரத்தை நேற்று விருத்தாசலம், நெய்வேலி தொகுதிகளில் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக பாமகவைச் சேர்ந்த நிர்வாகி விநாயகம் என்பவர் கூறும்போது, “120 தொகுதிகளில் முதற்கட்டமாக பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளோம். தமிழகத்தின் இன்றைய அடிப்படைத் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து வருகிறோம். அவர்கள் கூறும் பதிலை கட்சித் தலைமையிடம் எடுத்துக் கூறுவோம்” என்றார்.

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்ப தாக ஒருதரப்பினர் கூறிவரும் நிலையில், திராவிடக் கட்சிகளுடன் இனி ஒருபோதும் கூட்டணி கிடையாது என கூறும் பாமகவினர் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரத்தை விநியோகித்து தேர்தல் பணிகளை தொடங்கியிருப்பது, தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in