Published : 05 Jan 2020 12:34 PM
Last Updated : 05 Jan 2020 12:34 PM

கோயில் நிலங்களை அரசு கையகப்படுத்தக் கூடாது: நாடு முழுவதும் போராட்டம் நடத்த விஷ்வ ஹிந்து பரிஷத் முடிவு

கோயில் நிலங்களை அரசு கையகப்படுத்துவதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தேசிய பொதுச் செயலர் மிலிந்த் பராண்டே கூறினார்.

இவ்வமைப்பின் தென்மாநில பொதுக்குழுக் கூட்டம் கோவை மதுக்கரையில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மிலிந்த் பராண்டே செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விஸ்வ ஹிந்து பரிஷத், நாடு முழுவதும் அமைப்பு விரிவாக்கத்துக்கான திட்டங்களை உருவாக்கி வருகிறது. உலகெங்கும் 29 நாடுகளிலும், இந்தியாவில் 60 ஆயிரம் இடங்களிலும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் இவ்வமைப்பு செயல்படுகிறது. சுகாதாரம், கல்வி, பெண்கள் அதிகாரம், திறன் மேம்பாடு தொடர்பாக ஒரு லட்சத்துக்-கும் மேற்பட்ட சேவைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

சுயநலம் மற்றும் அரசியல் காரணங்களுக்காகத்தான் குடியுரிமை சட்டத்துக்கு எதிராகபோராட்டங்கள் நடைபெறுகின்றன. ஏற்கெனவே செய்யப்பட்ட வரலாற்று தவறுகளை சரிசெய்யும் நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்டதே குடியுரிமை சட்டம். பாகிஸ்தானில் குருநானக் பிறந்த இடம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. துறவிகள் வழி
பாட்டை முடிந்து வரும்போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினர் நிலைமை இதுதான். எனவே, இந்த நாடுகளில் மதக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான சிறுபான்மையினருக்கு உதவுவதற்கே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு குடியுரிமை மற்றும் பாதுகாப்பை வழங்கும் இந்த சட்டத்தை எதிர்ப்பது மோசமான செயலாகும்.

இந்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களில் பொது சொத்துகளை அழிப்பது தவறானது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். கோயில் நிலங்களை அரசு கையகப்படுத்துவது என்பது சட்டவிரோதமானது மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்புக்கும் எதிரானது.

கோயில்களின் நிர்வாகத்தை அரசு எடுத்துக்கொள்வதும் தவறானதுதான். இது தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த உள்ளோம். இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் எதிரானதுதான். தமிழகத்தில் பொங்கலுக்குப் பிறகு இந்தப் போராட்டங்கள் நடத்தப்படும்.

அதேபோல, இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அரசுகளை எதிர்த்து, அம்மாநிலங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போராட்டம் நடத்த உள்ளோம். அயோத்தி ராம ஜென்ம பூமியில், குறிப்பிட்ட காலத்துக்குள் பிரம்மாண்டமான முறையில் ஸ்ரீராமர் கோயில் கட்டி முடிக்கப்படும். இதுதொடர்பாக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், நம்பிக்கையளிப்பதாக உள்ளன. எனினும், கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை, அரசின் பணத்தை உப
யோகப்படுத்தக் கூடாது.

அறக்கட்டளை நிதியிலிருந்துதான் கோயிலைக் கட்ட வேண்டும். ஏற்கெனவே இதற்காக கொண்டு வரப்பட்டுள்ள கற்களைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் மத மாற்றங்களைத் தடுப்பதற்காக, 1,000 கிராமங்களில் இந்து சாதுக்கள் மூலம் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x