

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு வாக்காளர்கள் முத்திரையிட்டு செலுத்திய 100-க்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுகள் சாலையோரம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணி நிறைவடைந்து, வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டு இன்று (ஜன.5) பதவி ஏற்பு நடைபெறவுள்ள நிலையில், குன்னம் பிரிவு சாலையின் ஓரமாக வாக்காளர்கள் செலுத்திய முத்திரையுடன், வாக்குச்சாவடி மைய அலுவலர்களின் கையொப்பத்துடன் கூடிய 113 வாக்குச் சீட்டுகள் நேற்று கிடந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகலறிந்து அங்கு சென்ற குன்னம் வட்டாட்சியர் சித்ரா தலைமையிலான வருவாய்த் துறையினரும், போலீஸாரும் அந்த வாக்குச் சீட்டுகளை சேகரித்தனர்.
தொடர்ந்து, இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதிகாரிகள் வந்ததை அறிந்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த வாக்குச்சீட்டுகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக சாலையோரம் வீசப்பட்டதா அல்லது வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வீசப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.