

27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், மாவட்ட ஊராட்சி வார்டு மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை பதவியேற்கின்றனர். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றன. வாக்கு எண்ணிக்கை கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெற்றன.
இதில் வெற்றி பெற்றவர்கள் விவரங்களை மாநிலத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெற்றி பெற்ற அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் சம்பந்தப்
பட்ட அலுவலகங்களில், நாளை காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளனர். இதில், தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக, சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகத்தில் முதலில் கிராம ஊராட்சித் தலைவர் பதவியேற்க வேண்டும்.
அதன் பின்னர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்க வேண்டும். ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஊராட்சி அலுவலகத்திலும், தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக, முதலில் மூத்த உறுப்பினர் பதவியேற்க வேண்டும். அவர்கள் முன்னிலையில் மற்ற உறுப்பினர்கள் பதவியேற்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மறைமுகத் தேர்தல் மேலும், 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 515 உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அந்தந்த மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர்கள், துணைத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் ஜன. 11-ம் தேதி நடைபெற உள்ளது.
அதேபோல், 314 ஊராட்சி ஒன்றியங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஆயிரத்து 90 உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அந்தந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், ஒன்றியக்குழு துணைத் தலைவர்களையும் அன்றே தேர்ந்தெடுக்க உள்ளனர்.