Published : 05 Jan 2020 11:45 AM
Last Updated : 05 Jan 2020 11:45 AM

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் நாளை தொடங்குகிறது

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நாளை (ஜன.6) ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 15-வது சட்டப்பேரவையின் 8 - வது கூட்டம் மற்றும் வரும் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

அதன்பின், ஆளுநரின் ஆங்கில உரையை பேரவைத் தலைவர் பி.தனபால் தமிழில் வழங்குவார். அத்துடன் முதல் நாள் கூட்டம் நிறைவு பெறும். பின்னர் அன்றைய தினம் பிற்பகலில் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து இதில் முடிவெடுக்கப்படும்.

பெரும்பாலும், கூட்டம் 4 நாட்கள் அதாவது அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரை நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்தக் கூட்டத் தொடரில் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு இவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஒருநபர் தீர்மானத்தை மு.க. ஸ்டாலின்பேரவை தலைவருக்கு அளித்துள்ளார்.

அதே நேரம், பேரவை கூடும் நாளுக்கு 15 நாட்கள் முன் தீர்மானம் குறித்த கடிதத்தை பேரவைத் தலைவரிடம் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு குறைந்த நாட்களுக்கு முன்னதாக கடிதம் கொடுத்துள்ளதால், இந்தத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படுமா என்பது கூட்டத்தொடரின் போதுதான்தெரியும்.

ஆளுநருடன் சந்திப்பு இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ராஜ்பவனில் நேற்று மாலை சந்தித்த பேரவைத்தலைவர் பி.தனபால், பேரவையில் நாளை உரையாற்ற வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x