Published : 04 Jan 2020 08:00 PM
Last Updated : 04 Jan 2020 08:00 PM

‘இப்படி செய்வீர்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை’: தோற்றுப்போன வேட்பாளரின் நன்றி போஸ்டர்

உசிலம்பட்டி

போஸ்டர் என்றவுடனேயே மதுரையை நினைவுபடுத்தும் அளவுக்கு தூங்காநகருக்கும் போஸ்டருக்கும் பிரிக்க முடியாத பிணைப்பு இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதுவும் அரசியல் போஸ்டருக்கு மதுரை இன்னும் பிரபலமானது.

அதை மீண்டும் நிரூபிக்கும்வகையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட உசிலம்படியைச் சேர்ந்தவர் ஒருவர் தன்னை தேர்தலில் தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் அடித்து ஒட்டி வைரலாகி வருகிறார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்குட்ப்பட்டது சேடபட்டி ஊராட்சி ஒன்றியம். இங்குள்ள கேத்துவார்பட்டி ஊராட்சியில் 2-வது ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு முருகேசன், பவுன்தாய், தங்கப்பாண்டி என மூன்று பேர் போட்டியிட்டனர்.

2-வது வார்டில் பதிவான 70 வாக்குகளும் நேற்று சேடபட்டி அருகே உள்ள எஸ்.கோட்டைப்பட்டி பராசக்தி மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் எண்ணப்பட்டன.

இதில், முருகேசன் 7 வாக்குகள், பவுன்தாய் 22 வாக்குகள், தங்கப்பாண்டி 39 வாக்குகள் பெற்றனர். ஒரு வாக்கு செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. இறுதியில், தங்கப்பாண்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கட்டில் சின்னத்தில் போட்டியிட்டு 7 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்த முருகேசன் என்பவர் தன்னைத் தோற்கடித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.

அதில், "என்னை "தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி எனவும், நீங்க இப்படி செய்வீங்கனு நான் கனவுல கூட எதிர்பார்க்கல..." என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் கூட கிடைக்காத அளவுக்கு இப்போது முருகேசனுக்கு போஸ்டர் மூலம் கிடைத்துள்ளது. தடைக்கல்லையும் படிக்கல்லாக்குவது இதுதான் போல.. என்று எண்ண வைத்திருக்கிறார் இந்த இளைஞர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x