

தென்காசியில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்திய குடியரசு தின விழா வருகிற 26-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் குடியரசு தின விழாவில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக்கொண்டு, தேசியக் கொடியேற்றுவது வழங்கம். மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது, பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கிவைத்தார். தென்காசியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாட முன்னேற்பாடுகளை செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் பழனிக்குமார் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஐ.சி.ஈஸ்வரன் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் பெரிய மைதானம் உள்ளது. அங்கு காவல்துறை அணிவகுப்பு, பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடத்த போதுமான இடம் உள்ளது. அந்த இடத்தில் குடியரசு தின விழாவை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
அந்த பள்ளி மைதானத்தை காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். மீண்டும் ஒரு முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றார்.