

தேனியில் குறைவான வெற்றி வித்தியாசம் உள்ள ஒன்றியங்களில் குலுக்கல் முறையைத் தவிர்க்க அரசியல் கட்சியினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தின் 3 ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக, திமுக வெற்றி வித்தியாசம் மிகக் குறைவாகவும், சில் இடங்களில் சமநிலையிலும் உள்ளது.
இதனால், லட்சக்கணக்கில் செலவு செய்துள்ள கட்சியினர் குலுக்கல் முறையைத் தவிர்த்து வலுவான ஆதரவை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தின் 8 ஒன்றியங்களில் நான்கு ஒன்றியங்களில் அதிமுகவும், 3 ஒன்றியங்களில் திமுகவும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. க.மயிலாடும்பாறையில் தலா 7 இடங்களில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது.
போடியைப் பொறுத்தளவில் மொத்தம் உள்ள 13வார்டுகளில் அதிமுக 6 இடங்களையும், திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அமமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தலா ஒரு இடத்தைக் கைப்பற்றி உள்ளனர்.
அதிமுக, திமுக இடையே வெற்றி வித்தியாசம் மிகக் குறைவாக உள்ளது. இதனால் அமமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இருவரும் யாரை ஆதரிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து ஒன்றியத் தலைவர் பதவி கிடைக்கும் நிலை அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் இருகட்சிகளிலும் முனைப்பு காட்டி வருகின்றன.
க.மயிலாடும்பாறையில் அதிமுகவும், திமுகவும் தலா 7 வேட்பாளர்களைப் பெற்றுள்ளதால் அங்கும் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டிநிலவிவருகிறது.
பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள 16வார்டுகளில் அதிமுக கூட்டணி 7இடங்களையும், திமுக 8இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் அமமுக வெற்றி பெற்றுள்ளது.
தலைவர் பதவிக்கு இங்கும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசம் இருப்பதால் இங்கு தங்களுக்கான ஆதரவு வேண்டி கட்சிகள் பல்வேறு வகையிலும் முனைப்பு காட்டி வருகின்றன.
சமநிலையில் இருந்தால் குலுக்கல் முறையில் தலைவரை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ள கட்சியினர் வலுவான ஆதரவையே நிலைநாட்ட விரும்புவர். குலுக்கல் முறையில் அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கும் அளவிற்குச் செல்ல மாட்டார்கள் எனவே ஆதரவிற்காக பல்வேறு வகையான பேரம் நடைபெறவே வாய்ப்புள்ளது.