Published : 04 Jan 2020 02:04 PM
Last Updated : 04 Jan 2020 02:04 PM

மதுரையில் அதிமுக செல்வாக்கு சரிகிறதா?- திருப்பரங்குன்றம் கோட்டையில் தொடர்ந்து தோல்வி முகம்

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் (இடது); அமைச்சர் செல்லூர் ராஜூ (வலது)

அதிமுகவின் கோட்டை என்று அறியப்படும் மதுரை மாவட்டத்தில் அக்கட்சி ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சரிவை சந்தித்துள்ளது. அதனால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வெகுவாகவே சோர்வடைந்துள்ளனர்.

தென்தமிழகத்தில் மதுரை அதிமுகவுக்கு செல்வாக்கான மாவட்டம். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்குவதற்கும், ஜெயலலிதா அரசியலில் நுழைந்ததிற்கும் மதுரை மாவட்டத்திற்கு நிறைய அரசியல் தொடர்பு உண்டு.

கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 8 இடங்களில் அதிமுக வெற்றிப்பெற்றது. ஆனால், கடந்த எம்பி தேர்தல் முதல், இந்த மாவட்டத்தில் அதிமுகவின் செல்வாக்கு சரியத் தொடங்கிவிட்டது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முனியாண்டி திமுக வேட்பாளர் சரவணனிடம் தோல்வியடைந்தார். எம்பி தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன், கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனிடம் தோல்வியடைந்தார்.

ஏமாற்றம்..

இந்நிலையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டத்தில் இழந்த செல்வாக்கு அதிமுக பெறுமா? என்று அக்கட்சியினர் எதிர்பார்த்து இருந்தனர்.

அதற்கு தகுந்தோர்போல், தேர்தல் களப்பணிகளையும் அதிமுகவினர் உள்ளாட்சித் தேர்தலில் முடுக்கிவிட்டனர். ஆனால், மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது.

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை திமுகவே கைப்பற்றும் வாய்ப்புள்ளது. அதுபோல், 6 முதல் 7 ஒன்றிய குழு தலைவர் இடங்களையும் திமுக கைப்பற்றும் வாய்ப்புள்ளது.

இதில், அதிமுகவின் பாரம்பரியக் கோட்டை என்று அக்கட்சியினர் பெருமைப்பட்டு கொள்ளும் திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் 22 ஒன்றிய கவுன்சிலர்களில் 6 கவுன்சிலர்களை மட்டுமே பெற முடிந்தது. கடந்த முறை இந்த ஒன்றியத்தில் அதிமுக வெற்றிப்பெற்று அக்கட்சியை சேர்ந்தவர் ஒன்றிய குழு தலைவராக இருந்தார்.

அதுபோல், சேடப்பட்டி ஒன்றியத்தில் அதிமுக 3 கவுன்சிலர்களை மட்டுமே பெற முடிந்தது.

கோஷ்டி பூசல் காரணம்?

மாவட்டத்தில் அதிமுகவுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிக்கு அக்கட்சியில் ஏற்பட்டுள்ள கோஷ்டிபூசலே முக்கிய காரணம் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். குறிப்பாக விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ மாவட்ட செயலாளராக இருக்கும் புறநகர் கிழக்கு மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மேற்கு, மேலூர் ஒன்றியங்களில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

இவரது மாவட்டத்திற்குட்பட்ட கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் மட்டுமே அதிமுக ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்றும் வாய்ப்புள்ளது. ஒரு காலத்தில் ராஜன் செல்லப்பாவின் தேர்தல் வியூகம் அக்கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் பெரிதாக பேசப்படும். கட்சிக்கும் வெற்றியை தேடித் தரும். ஆனால், தற்போது தொடர்ந்து அவரது தேர்தல் பிரச்சாரம், வியூகத்தை எதிர்கட்சியினர் உடைத்து வெற்றிபெறுவது வாடிக்கையாகிவிட்டது. இது தனிப்பட்ட முறையில் ராஜன் செல்லப்பாவுக்கும், அதிமுகவுக்கும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

மூவரும் இணைவார்களா!

புறநகர் கிழக்கு மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் நடந்த தோல்விக்கு புறநகர் மாவட்ட செயலாளர் என்ற முறையில் விவி.ராஜன் செல்லப்பாவும், கட்சித் தலைமையும் சுயப்பரிசோதனை செய்வது அவசியம்.

அதுமட்டுமல்லாமல் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் தங்களிடையே உள்ள கோஷ்பூசலை மறந்து, முன்போல் ஒற்றுமையாக மாவட்டத்தில் கட்சிப்பணியை மேற்கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் வரவிருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் திமுகவின் வெற்றியை மதுரை மாவட்டத்தில் அதிமுகவால் தடுக்க முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x