

சிவகங்கையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டு வீடு திரும்பிய ஆசிரியர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கான வாக்கு எண்ணும் பணி கடந்த வியாழக்கிழமை (ஜன.2) அந்தந்த ஒன்றியங்களில் நடைபெற்றது. இப்பணியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தேவகோட்டை ஒன்றியத்திற்கு நடைபெற்ற மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணும் பணிக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தேவகோட்டை வட்டார துணைத் தலைவரும், சிறுநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமாகிய ஆர்.டேவிட்ராஜ்குமார் பணியமர்த்தப்பட்டு வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
இரவு நெடுநேரம் பணியாற்றிவிட்டு வீடு திரும்பிய அவர் தனது வீட்டில் ஓய்வெடுத்துள்ளார். மறுநாள் நெடுநேரமாகியும் படுக்கையில் இருந்து எழுந்திருக்காததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை எழுப்புகையில் தூக்கத்திலேயே இறந்திருப்பது தெரிய வந்தது. இதனைக் கண்டு உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆசிரியர் டேவிட்ராஜ் உடல் இன்று பிற்பகல் முப்பையூர் அருகில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படுவதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.