

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை தேமுதிகவின் போராட்டம் தொடரும் என்று மதுவிலக்குக்கான உண்ணாவிரதப் போராட்டத்தில் விஜயகாந்த் கூறினார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டி தேமுதிக சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழக வளாகத்தில் நடந்த இந்தப் போராட்டத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த போராட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் உட்பட தேமுதிக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த உண்ணாவிர போராட்டத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் தேமுதிகவின் கொள்கை. அதற்காகவே, இன்று உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது. 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத்தான் மது விற்க வேண்டும் என்று நான் பேசியதை சிலர் வேறு மாதிரி சொல்கிறார்கள். எதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி பேசினேன்.
சசிபெருமாள் மரணத்தில் மர்மம் உள்ளது. எனவே சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்டிருந்தேன். அவரது மரணத்தால்தான் பலரும் மதுவிலக்குக் கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழக அரசு மதுக்கடைகளை மூட மறுக்கிறது. தமிழிசை சவுந்தரராஜன் என்னை சந்தித்து பேசியதால் பாஜகவுடன் கூட்டணியா என்று சிலர் பேசக்கூடும். ஒரு கட்சி தலைவரை இன்னொரு கட்சி தலைவர் சந்தித்து பேசினால், அது கூட்டணிக்கான சந்திப்பு தானா?
சட்டப் பேரவையை கூட்டப்போவதாக அறிவித்துள்ளனர். சட்டப் பேரவைக்கு நான் வருவேனா என்று கேட்கலாம். கண்டிப்பாக நான் வருவேன். எனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலர் நீக்கப்பட்டுள்ளனர். எனது தொகுதி பணிக்காக மத்தியிலிருந்துதான் நிதி பெற முடிந்தது. தேர்தல் பற்றி இப்போது பேச அவசியமில்லை. மதுவுக்கு எதிராக போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் என்ன தவறு செய்தனர். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை தேமுதிகவின் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அமைப்பு பொதுச் செயலாளர் மோகன்ராஜுலு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உண்ணாவிரத பந்தலுக்கு வந்து விஜயகாந்துக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். உண்ணாவிரதத்தை தேமுதிக மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்.