உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி: கடைநிலை ஊழியர்களை பாராட்டிய வேட்பாளர்கள், முகவர்கள் 

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி: கடைநிலை ஊழியர்களை பாராட்டிய வேட்பாளர்கள், முகவர்கள் 
Updated on
1 min read

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், கடை நிலை ஊழியர்களின் பணி வேட்பாளர் கள், முகவர்களை வெகுவாக கவர்ந்தது.

மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 13 இடங்களில் எண்ணப்பட்டன. பொதுத் தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை பணியில் வருவாய்த்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவது வழக்கம்.

ஆனால் தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள், சமூக சேவகர்கள், வங்கி பணியாளர்கள், தனியார் பள்ளி ஊழியர்கள் பலர் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுக்கு வாக்கு எண்ணிக்கையில் போதிய அனுபவம் இல்லாததால் பணிகள் தாமதமானது.

இருப்பினும் வாக்கு எண்ணிக்கையின்போது கடை நிலை ஊழியர்கள் பலரது அயராத உழைப்பு, உபசரிப்பு ஆகியவை வேட்பாளர்கள், முகவர்களை வெகுவாக கவர்ந்தது. மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய வாக்குகள் மதுரை விவசாயக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த மையத்தில் பேச்சியம்மாள் (68) என்பவரின் ஓய்வில்லாத பணி பாராட்டுக்குரியதாக இருந்தது. வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள், போலீஸாருக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து கொடுத்தார். சாப்பாடு விநியோகம் செய்வது, தேநீர் வழங்குவது என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் பேச்சியம்மாள்.

அவர் கூறியதாவது: ஊராட்சி ஒன்றியத்தில் என் கணவர் பணிபுரிந்தார். அவர் இறந்த நிலையில் என் மகனுக்கு கருணை வேலை கிடைத்தது. மகனும் இறந்த நிலையில் நான் பணிபுரிந்து வருகிறேன். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வரும் அனைவருக்கும் என்னை தெரியும். அவர்கள் என்னை அன்போடு பாட்டி என்றே அழைப்பார்கள். எனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை விரும்பி செய்வதால் சோர்வில்லாமல் உழைக்க முடிகிறது என்று கூறி னார். இதேபோல் அனைவரையும் கவர்ந்த மற்றொருவர் போஸ். இவர் மருதுபாண்டியன் நகரைச் சேர்ந்தவர். மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் 1982-ல் இருந்து லோடுமேனாக உள்ளார்.

இவர் ஓட்டுப் பெட்டிகளில் சீல் அகற்றப்பட்டு வாக்குகள் கொட்டப்பட்டு, அதிலிருந்து பதவி வாரியாக ஓட்டு சீட்டுகள் பிரிக்கப்பட்டதும், அந்த ஓட்டு சீட்டுகளை அதற்கான மையங் களுக்கு வாளியில் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்டு வந்தார்.

ஒவ்வொரு முறையும் ஓட்டுச் சீட்டுகளை கொட்டிய பிறகு வேட்பாளர்களின் முகவர்களிடம், வாளி காலியாக இருப்பதை காண்பித்துச் சென்றார். இவரது பணி அனைவரையும் கவர்ந்தது.

போஸ் கூறுகையில், வாக்குப் பெட்டிகளை இறக்குவது, ஏற்றுவது, பல்வேறு இடங்களுக்கு கொண்டுச் செல்லும் பணியை பல ஆண்டுகளாக செய்து வருகிறேன். வாக்கு எண்ணிக்கையில் விருப்பு, வெறுப்பு இல்லாமல் நேர்மையுடன் இருப்பது முக்கியமாகும். இதுரை 4 வாக்கு எண்ணிக்கை பணிகளில் பணிபுரிந்துள்ளேன். தேர்தலின் போது எனக்கு ஒதுக்கப்படும் பணியை அதிகாரிகள் பாராட்டும் வகையில் மேற்கொள்கிறேன் என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in