Published : 04 Jan 2020 12:48 PM
Last Updated : 04 Jan 2020 12:48 PM

துப்பாக்கிச் சூடு கோபம், மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகும் தூத்துக்குடியில் கால் பதித்த அதிமுக

தூத்துக்குடியில் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்த அதிமுக மீண்டும் தனது நிலையைத் தக்கவைத்துள்ளது. மறுபுறம் தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்ற திமுக, தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியை இழந்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இமாலய வெற்றியைப் பெற்றது. 100 சதவித வெற்றி என்று சொல்லும் அளவுக்கு தேனியைத் தவிர அனைத்துத் தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது. தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிட்டார். அவரை எதிர்த்து தமிழிசையை அதிமுக கூட்டணியில் பாஜக நிறுத்தியது.

கனிமொழிக்கு வலுவான போட்டியை தமிழிசை தருவார் என ஒரு சாரரும், தமிழிசை வெல்வார் என ஒரு தரப்பினரும் தெரிவித்தனர். தூத்துக்குடி எப்போதும் அதிமுகவின் கோட்டை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக இருந்ததாகவும், போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதும் தமிழக அரசுக்கு கெட்டபெயரை ஏற்படுத்தியது.

மக்கள் முன் உள்ள கோபாவேசம் அதிமுக இனி தூத்துக்குடியில் காலூன்ற முடியாது என்று கூறப்பட்டது. ஆனால் மற்ற தொகுதிகளைப் போலவே திமுக அலையில் கனிமொழி எளிதாக வெற்றி பெற்றார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5-ல் அதிமுக வென்ற நிலையில் 2019-ல் திமுக வென்றது பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது.

இதற்குக் காரணம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு என்றெல்லாம் கூறப்பட்டாலும், நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வலுவான அலையில் திமுக வென்றது என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டது. இதே நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போடப்பட்டு இறுதியில் அறிவிக்கப்பட்டது.

இதில் தூத்துக்குடி மாவட்டக் கவுன்சிலர், மாவட்டக் கவுன்சில் வாக்கு எண்ணிக்கையில் மீண்டும் அதிமுக தூத்துக்குடியைத் தக்க வைத்துக்கொண்டது.

2011 உள்ளாட்சித் தேர்தலில் 17 மாவட்ட வார்டுகளில் அனைத்தையும் அதிமுக கைப்பற்றியது. இம்முறை 12 ஊராட்சி வார்டுகளை மட்டுமே அதிமுக கைப்பற்றினாலும் மாவட்ட ஊராட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. திமுக இதில் 5 ஊராட்சி வார்டுகளை கைப்பற்றியது. இது திமுகவுக்கு வெற்றியாக கருதப்பட்டாலும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை வைத்துப் பார்க்கும்போது இழப்பாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

ஆனாலும், ஊராட்சி வார்டுகளில் திமுக கணிசமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தமுள்ள 174 ஊராட்சி வார்டுகளில் 63 வார்டுகளை அதிமுகவும், 61 வார்டுகளை திமுகவும் கைப்பற்றியுள்ளது. பாஜக 3, தேமுதிக 2 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் 7 வார்டுகளையும் சிபிஎம் 2, சிபிஐ 1 வார்டையும் சேர்த்து 71 வார்டுகளை திமுக கூட்டணியும், 68 வார்டுகளை அதிமுக கூட்டணியும் வென்றதன் மூலம் திமுக அதிக ஒன்றிய உறுப்பினர்களைப் பெற்ற கூட்டணியாக விளங்குகிறது.

தமிழகம் முழுவதும் 'ஆப்ரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெட்' என்ற நிலை தூத்துக்குடியிலும் உள்ளது. தூத்துக்குடியில் அதிமுகவுக்கு வெற்றியா என்று கேட்டால் இருவருக்குமே வெற்றி எனச் சொல்லலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x