Published : 04 Jan 2020 12:33 PM
Last Updated : 04 Jan 2020 12:33 PM

விரைவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தேர்தல்: மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி பேட்டி

மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி: கோப்புப்படம்

சென்னை

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும். உள்ளாட்சித் தேர்தல் 100% பாரபட்சமின்றியும், சுதந்திரமாகவும் நடைபெற்றதாக மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி இன்று (ஜன.4) சென்னை, கோயம்பேட்டில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த டிச. 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவியிடங்களை நிரப்பிட நேரடித் தேர்தல் நடைபெற்றது. இதில், 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 9,624 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களும் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் அடங்கும்.

இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 18 ஆயிரத்து 137 பதவியிடங்களுக்கும், கிராம ஊராட்சி மன்ற தலைவர்களில் 410 பதவியிடங்களுக்கும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 23 பதவியிடங்களுக்கும் மொத்தமாக, 18 ஆயிரத்து 570 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இத்தேர்தலில், முதல்கட்ட வாக்குப்பதிவு 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகளிலும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகளிலும் மொத்தம் 49 ஆயிரத்து 688 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

டிச.27 அன்று நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில், 77.10% வாக்குகளும், டிச.30 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 77.73% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

முதல் கட்டத் தேர்தலில் 30 வாக்குச்சாவடிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குச்சீட்டுகளின் சின்னங்கள் மற்றும் இதர குறைபாடுகள் இருந்ததால், டிச.30 அன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த மறு வாக்குப்பதிவில், 72.70% வாக்குகள் பதிவாகியது. இரண்டாம் கட்டத் தேர்தலில், இதுபோன்ற நிகழ்வால், 9 வாக்குச்சாவடிகளில் ஜன.1 அன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 59.42% வாக்குகள் பதிவாகின. இரண்டு கட்ட வாக்குப்பதிவு மற்றும் மறுவாக்குப்பதிவில் மொத்தமாக, 77.46% வாக்குகள் பதிவாகின.

வேட்பாளர் இறப்பு காரணமாக, திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் கே.பெரியப்பட்டி கிராம ஊராட்சி வார்டு எண் 2, திருவாரூர் மாவட்டம் கொடவாசல் ஊராட்சி ஒன்றியம் சிறுகுடி ஊராட்சி வார்டு எண் 1, திருவண்ணாமலை வந்தவாசி ஊராட்சி ஒன்றியம் சென்னகரம் கிராம ஊராட்சி வார்டு எண் 1 ஆகியவற்றில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இறந்த காரணத்தால், தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் 23.12.2019 அன்று வெளியிடப்பட்ட துணை வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டதால், 25 பதவியிடங்களுக்கு வாக்குகள் எண்ணுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையத்திடமிருந்து அறிக்கை பெறப்பட்டதும் இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்புக்காக காவல்துறையைச் சேர்ந்த 30 ஆயிரத்து 354 உயர் அலுவலர்கள் ஈடுபட்டனர். வாக்கு எண்ணும் பணியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3,000 முதல் 5,500 வரையிலான பணியாளர்கள் வீதம் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட ஒரு ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பார்வையாளராக பிற பணிகளுடன் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் பணியையும் கண்காணித்தனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்கு எண்ணும் மையத்திலும் மத்திய அரசு நிறுவனங்களைச் சேர்ந்த 6 அலுவலர்கள் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு மொத்தம் 1,890 நுண்பார்வையாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்பார்வை பணியினை மேற்கொண்டனர்.

27 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தலைவர்கள் வரும் 6-ம் தேதி காலை 10 மணிக்கு பதவியேற்பு செய்துகொள்வார்கள்.

தேர்தல் தொடர்பாக கடந்த 1-ம் தேதி முதல் இன்று வரை 712 புகார் மனுக்களும் தொலைபேசி மூலம் 1,082 புகார்களும் பெறப்பட்டு ஆணையத்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு புகாரில் தெரிவிக்கப்பட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன. வாக்கு எண்ணும் பணியினை அமைதியாகவும் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் மேற்கொண்டனர்.

அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். அவற்றுக்கெல்லாம் உரிய பதில்கள் அளிக்கப்பட்டன. அவர்களுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கபட்டன.

மாநிலத் தேர்தல் ஆணையத்தில் 24 மணி நேர புகார் தெரிவிக்கும் மையமும் அமைக்கப்பட்டிருந்தது" என தெரிவித்தார்.

இதையடுத்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

திமுகவினர் பல புகார்களை அளித்தனரே?

திமுகவினர் புகார் தெரிவித்தனர். உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல இடங்களில் முடிவுகள் வெளியிடப்படவில்லை எனத் தெரிவித்தனர். அதனைச் சரிசெய்து அவர்களுக்குத் தெரிவித்தோம். முன்பு நடந்த தேர்தல்களை விட இந்தத் தேர்தல் சுதந்திரமாகவும் பாரபட்சமுமின்றி நடைபெற்றது என்பது மக்களுக்குத் தெரியும்.

சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து அதிமுகவினர் வெற்றி பெற்றதாக அறிவித்ததாகவும், ஆனால், உண்மையில் திமுகவினர் வெற்றிபெற்றதாகவும் புகார் எழுந்துள்ளதே?

தேர்தலில் எந்த முறைகேடும் இல்லை. இதனை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. சிசிடிவி சம்பந்தமாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தேர்தல் எப்போது அறிவிக்கப்படும்?

விரைவில் அறிவிக்கப்படும். ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை 99% இணையத்தில் பதிவேற்றிவிட்டோம்.

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கருத்துகள் இருந்தால் சொல்லலாம் என ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். ரகசியமாக இதனைச் செய்யவில்லை.

பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு எப்போது தேர்தல் நடக்கும்?

புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்த சில வழிமுறைகள் இருக்கின்றன. பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. விரைவில் முடிப்போம். பரிசீலித்து முடிவு செய்வோம்.

நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் இருந்ததாகப் புகார் எழுந்துள்ளதே?

நடைமுறைச் சிக்கல்கல் இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது துறை சார்பான நடவடிக்கை எடுப்பதற்கும் ஆணையம் பரிந்துரைக்கும்.

வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றதா?

நீங்கள் தான் சொல்ல வேண்டும். பெரியளவிலான கலவரத்திற்கோ சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கோ இடமில்லாமல் தேர்தலும் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.

இவ்வாறு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x