Published : 04 Jan 2020 11:24 AM
Last Updated : 04 Jan 2020 11:24 AM

தடைகளைத் தாண்டி திமுக கூட்டணியை வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி: இரா.முத்தரசன்

உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இரா.முத்தரசன் இன்று (ஜன.4) வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக ஆட்சியில் மூன்றாண்டுகளாக முடக்கிப் போடப்பட்ட உள்ளாட்சி ஜனநாயகத்தை மீட்டெடுக்க எதிர்க்கட்சிகள் நடத்திய நீண்ட போராட்டத்தாலும், திமுகவின் சட்டப் போராட்டத்தாலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத அதிமுக அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, அதிலும் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே 2019-ம் ஆண்டு, டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தியுள்ளது.

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அரசின் ஒரு பிரிவு போல் செயல்படுவது நீதிமன்றத்தில் வெளிப்பட்டது. தொடர்ந்து ஆளும் கட்சியின் அழுத்தங்களுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் ஆளாகியதை தேர்தல் நடைமுறைகளும் வெளிப்படுத்தியுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆளும் கட்சியினர் அத்துமீறிச் செயல்பட்டுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சியின் விருப்பம் போல் சில இடங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு பொறுப்புக்குப் போட்டியிட்ட இருவரும் வெற்றி பெற்றதாகச் சான்று வழங்கியிருப்பது, எதிர்க்கட்சியினரின் 'மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்' என்ற கோரிக்கை பல்வேறு இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தடைகள், இடையூறுகளைத் தாண்டி, திமுகவின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து மகத்தான வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கும் ஆளும் கட்சியின் சட்ட அத்துமீறல்கள், அராஜக நடவடிக்கைகளை தடுத்து, விழிப்புடனும், முனைப்போடும் பணியாற்றிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகளுக்கும், ஆயிரமாயிரம் தொண்டர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

இத்தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் 7, ஒன்றிய ஊராட்சிக் குழு உறுப்பினர் 72 பேரும் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்து, கல்வி, குடியிருப்பு, குடிதண்ணீர், வடிகால், தெருவிளக்கு, சுகாதாரம், மருத்துவம், இணைப்புச் சாலை, ஊரக வேலை உறுதியளிப்பு திட்டச் செயலாக்கம், மக்கள் நலத்திட்டங்கள் போன்றவைகளை நிறைவேற்றுவதில் அக்கறையோடும், முனைப்போடும் செயல்படுவார்கள்" என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x