

டயர்களை எரித்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என பசுமை தீர்ப்பாய தலைவர் ஜோதிமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 1-வது மண்டலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பையை எருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இவற்றை சென்னை பசுமை தீர்ப்பாய தலைவரும், நீதிபதியுமான ஜோதிமணி நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பிறகு வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள் ஒன்றுக்கு எவ்வளவு குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. குப்பைகள் எவ்வாறு எருவாக்கப்படுகிறது என்பது குறித்து திடக்கழிவு மேலாண்மை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து, செய்தியாளர் களிடம் பசுமை தீர்ப்பாய தலைவர் ஜோதிமணி கூறியதாவது:
வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்பட்டாலும், குப்பை களை எருவாக்க மாட்டு சாணம் பயன்படுத்தப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடு வேண்டும். வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவக்கழிவுகளை வெளி யேற்றிய புகாரில் அந்த மருத்துவ மனைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக்கழிவுகளை சரிவர அகற்றாத தனியார் மற்றும் அரசு மருத்துவமனை என யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். ராணிப் பேட்டை மாவட்டத்தில் குரோமியக் கழிவுகளை அகற்ற வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. இதற்காக ரூ.2 கோடிக்கு திட்ட அறிக்கையும் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்ற ரூ.1,000 கோடி தேவைப்படும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதியில் டயர்களில் உள்ள செம்புகம்பிகளை எடுக்க டயர்கள் எரிப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, டயர்களை எரித்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பசுமை தீர்ப்பாய தலைவரின் ஆய்வின்போது, வேலூர் மண்டல இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வம், மாநகராட்சி ஆணையர் கிருஷ்ண மூர்த்தி, பொறியாளர் சீனிவாசன், நகர் நல அலுவலர் மணிவண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.