

கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக கரு தப்படும் கடலூர் மாவட்டத்தில் சிறார் திருமணங்கள் அதிக ரித்து வருகின்றன.
மத்திய அரசின் 'பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டம் கடலூர் மாவட்டத்தில் நடைமுறைப்படுத் தப்பட்டு, பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சிகளை மாவட்ட சமூக நலத்துறை மேற் கொண்டு வருகிறது.
பெண் குழந்தைகளுக்கான சிறப்புத் திட்டம் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மறுபுறம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிறார் திருமணங்களும் ஆங்காங்கே நடந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள்.
விருத்தாசலம், வேப்பூர், பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 368 சிறார் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. 2019 ஜனவரி முதல் அக்டோபர் வரை 63 சிறார் திரும ணங்கள் நடைபெற்றிருப்பதாகவும், 82 சிறுமிகளின் திருமணங்கள் தடுத்து நிறுத்தப் பட்டிருப்பதாகவும் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த வர்கள் தெரிவிக்கின்றனர்.
ஊரகப் பகுதிகளாக விளங்கும் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் பெற்றோர் வருமானம் ஈட்டுவதற்காக வெளியூர் செல்லும் சூழலில், பெற்றோர் குழந்தைகளிடையே இடைவெளி அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தனிமையில் இருக்கும் சிறுமிகள் இளைஞர்களிடம் எளிதில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால் சிறுமி என்ற சூழலையும் பொருட்படுத்தாமல் திருமணம் என திசை மாறும் நிலை ஏற்படுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகியிடம் கேட்டபோது, “பல்வேறு விழிப்பு ணர்வு நிகழ்வுகளின் மூலம் சிறார் திருமணங்கள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.
விருத்தாசலம் பகுதியில் சற்று மிகுதியாக காணப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு சிறார் திருமணங்கள் 61 ஆக இருந்த நிலையில், 2015-ம் ஆண்டு கட்டுப்படுத்தப்பட்டு 42 ஆக குறைந்தது.
அதே நேரத்தில் 2018-ம் ஆண்டு 88 ஆக அதிகரித்தது. தற் போது 63 என்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.
தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். வீட்டில் பெற்றோர் எவரேனும் சிறுமிகளுக்கு கட்டாயத் திருமணத்திற்கு நிர்ப்பந்தித்தால் உதவி எண் 1098 மற்றும் 181-ஐ தொடர்புகொள்ள அறிவுறுத்தி வருகிறோம். அண்மையில் 181-ஐ தொடர்பு கொண்டு ஒரு சிறுமி தகவல் தெரிவித்ததன் பேரில் அவர் மீட்கப்பட்டார்.
பின்னர் அவரது பெற்றோருக்கு அறிவுரை வழங்கி, சிறுமி திருமண வயதை எட்டிய பின்பு தான் திருமணம் நடத்தி வைப்போம் என்ற உத்தரவாத கடிதத்தையும் பெற்றோம்” என்றார்.