Published : 04 Jan 2020 07:32 AM
Last Updated : 04 Jan 2020 07:32 AM

திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழு, 14 ஒன்றியங்களில் திமுகவுக்கு பெரும்பான்மை; வேட்பாளர் தேர்வும் வெற்றிக்கு காரணம்: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கருத்து

திருச்சி தில்லைநகரிலுள்ள கட்சி அலுவலகத்தில் வாழ்த்து பெற வந்த திமுக வேட்பாளர்களிடம் நன்றி தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. உடன் திமுக தலைமைக் கழக பார்வையாளர் சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன் உள்ளிட்டோர்.

திருச்சி

உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 24 மாவட்ட கவுன்சிலர் வார்டுகளில் திமுக 18 இடங்களிலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர், துணைத் தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

14 ஒன்றியங்களிலும் தனி மெஜாரிட்டி

இதேபோல மாவட்டத்தில் 241 ஒன்றிய கவுன்சிலர் வார்டுகளில் திமுக 146 இடங்களிலும், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 4 இடங்களிலும், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 14 ஒன்றியங்களிலும் தனி மெஜாரிட்டி இருப்பதால் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்களே ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளையும் கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

திமுக வெற்றி குறித்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இந்து தமிழ் திசை நாளிதழிடம் கூறும்போது, “திமுக மீதும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதை இந்த வெற்றி காட்டுகிறது. வார்டு ஒதுக்கீடு, பிரச்சாரம் என அனைத்து நிலைகளிலும் கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பு, எவ்வித எதிர்பார்ப்புமின்றி கட்சி தொண்டர்களின் வாக்குசேகரிப்பு, போட்டி மனப்பான்மையின்றி ஒருங்கிணைந்து செயல்பட்டது போன்றவையும் வெற்றிக்கு வழிவகுத்தன. அதேபோல வேட்பாளர் தேர்வில் ஒன்றிய நிர்வாகிகளுக்கு அளித்திருந்த முழு சுதந்திரமும் முக்கிய காரணம். கட்சித் தலைமையோ, மாவட்ட நிர்வாகிகளோ இதில் தலையிடவில்லை. உள்ளூர் சம்பந்தப்பட்ட தேர்தல் என்பதால், விறுப்பு வெறுப்பின்றி ஒவ்வொரு பகுதியிலும் மக்களிடத்தில் செல்வாக்கு மிகுந்த, வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களின் பட்டியலை பரிந்துரைக்குமாறு கேட்டிருந்தோம். அதன்படி, அவர்கள் அளித்த பட்டியலில் இருந்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தி, வேட்பாளர் களாக அறிவித்தோம். அதற்கு பலன் கிடைத்துள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தில் கிடைத்த இந்த வெற்றியில் ஒன்றியச் செயலா ளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் பெரும் பங்குண்டு” என்றார்.

உற்சாகத்தில் திமுகவினர்

உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் திமுக அபார வெற்றியைப் பெற்றதால் உற்சாகமடைந்த அக்கட்சி வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் திருச்சியிலுள்ள கலைஞர் அறிவாலயம், தில்லை நகரிலுள்ள கட்சி அலுவலகம் ஆகிய இடங்களுக்குச் சென்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவருடன் எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்டாலின்குமார், வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ந.தியாக ராஜன், மாநகரச் செயலாளர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பேரவை வெற்றிக்கு முன்னோட்டம்

கலைஞர் அறிவாலயத்தில் நேற்று திமுகவினரிடையே கே.என்.நேரு பேசியபோது, ‘‘திருச்சி மாவட்டத்தில் திமுக கூட்டணி அபார வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. திமுக மற்றும் கூட்டணி கட்சியினரின் கடுமையான உழைப்பே இந்த வெற்றிக்கு காரணம். இது வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கான முன் னோட்டம். மு.க.ஸ்டாலினை முதல்வராக்க திமுகவினர் இதே வேகத்தில் தொடர்ந்து செயல்பட வேண்டும்’' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x