

இந்திய விடுதலைக்கு வித்திட்டது ஒரு சின்னஞ்சிறு புத்தகம் தான் என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா கண்காட்சியை திறந்து வைத்தார்.
விழாவில் மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஈரோடு த.ஸ்டாலின் குணசேகரன் பேசியது: உலக சமய மாநாட்டில் பேசுவதற்காக விவேகானந்தர் அமெரிக்கா சென்ற அதே 1893-ம் ஆண்டில், குஜராத்தில் இருந்து ஒரு இளைஞர் வழக்கறிஞர் தொழில் செய்வதற்காக தென்னாப்பிரிக்கா சென்றார். அப்போது லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘உனக்குள் ஒரு கடவுளின் சாம்ராஜ்யம் இருக்கிறது’என்கிற புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. நிறவெறி காரணமாக தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் துன்பப்படுத்தப்படுவதைக் கண்டு வெகுண்ட அந்த இளைஞர், நேராக லண்டன் சென்று இங்கிலாந்து அரசிடம் முறையிட முடிவு செய்தார். அவர் தான் மகாத்மா காந்தி. ஆனால், அவருக்கு உயர் அதிகாரிகளை சந்திக்க வாய்ப்புத் தரப்படவில்லை. உடனே அவர், தன்னைப் பாதித்த நூலின் ஆசிரியரான டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதுவரை இருவருக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. என்றாலும், அக்கடிதத்தைப் படித்த டால்ஸ்டாய், இந்துக் களுக்கு ஒரு கடிதம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை அனுப்பி வைத்தார். அது தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சத்தியாக்கிரகம் செய்யவும், ஒத்துழையாமை இயக்கம் நடத்தவும் தூண்டுகோலாக இருந்தது என்று காந்தி தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் 1100 ஏக்கரில் பண்ணை வாங்கி, அங்கு நலிந்த இந்தியர்களை குடியேற்றிய காந்தி அப்பண்ணைக்கு வைத்த பெயர் டால்ஸ்டாய் பண்ணை. ஆக, ஒரு சிறு புத்தகம் தான் விடுதலைக்கே வித்திட்டுள்ளது.
இறக்கும் தருவாயில் இருந்த அண்ணாவும், தூக்குத் தண்டனை மேடையேறும் தருவாயில் பகத்சிங்கும் தான் படித்துக் கொண்டிருக்கும் நூலை முழுமையாக படித்துக் கொள்கிறேன் என்று அனுமதி கேட்டதை அறிந்திருப்பீர்கள். ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் கற்பக விநாயகத்தின் சுயசரிதையை சமீபத்தில் படித்தேன்.
சிறுவயதில் தற்கொலை செய்ய முடிவெடுத்த அவர், அதற்கு நேரம் குறித்துவிட்டு இடைப்பட்ட நேரத்தில் நூலகம் சென்று சத்தியசோதனை புத்தகத்தை தற்செயலாகப் படித்திருக்கிறார். அதனால் தற்கொலை எண்ணம் மறைந்து போனதாக குறிப்பிட்டுள்ளார். அதனால் தான் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அவர், குற்ற வழக்கில் கைதான ஒரு எம்.எல்.ஏ. நிபந்தனை ஜாமீன் கேட்டபோது தல்லாகுளம் காவல்நிலையத்தில் கையெழுத்திடச் சொல்லாமல், காந்தி மியூசியத்தில் தங்கி கையெழுத்திட்டு அங்குள்ள புத்தகங்களை படிக்கச் சொன்னார்.
புத்தகங்கள் தனி மனிதனின் வாழ்க்கையை மட்டுமல்ல, நாட்டின் தலைவிதியை கூட மாற்றும். எனவே, இங்கு வந்துள்ள அனைவரும் புத்தகங்களை வாங்கிப் பயன்பெற வேண்டும் என்றார்.
முன்னதாக ஆட்சியர் இல.சுப்பிரமணியன் பேசுகையில், எத்தனை மின் புத்தகங்கள் வந்தாலும், அச்சுப் புத்தகங்களை அழிக்க முடியாது. வாசிப்பின் முக்கியத்துவத்தை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததால்தான், மாணவர்களை கண்காட்சிக்கு அனுப்புமாறு மாவட்டத்தில் உள்ள 15 பொறியியல், 50 கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் 200-க்கும் அதிகமான மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார்.
மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா பேசுகையில், அண்ணா மறைவுக்குப் பின்னர் அவர் எழுதிய புத்தகங்கள் எல்லாம் அவரது வீட்டில் தேங்கிக்கிடந்தன. அதைக்கண்ட எம்ஜிஆர், சட்டக்கல்லூரி மாணவர்களாகிய எங்களை எல்லாம் சென்னைக்கு வரவழைத்து, கூவிக்கூவி புத்தகங்களை விற்கச் சொன்னார். அவர் நினைத்திருந்தால் எல்லா புத்தகங்களையும் மொத்தமாக வாங்கியிருக்கலாம். ஆனால், அந்தப் புத்தகங்கள் மக்கள் கைகளில் தவழ வேண்டும், கருத்துக்கள் பரவ வேண்டும் என்று தான் விற்கச் சொன்னார் என்றார்.
முன்னதாக பபாசி தலைவர் மெ.மீனாட்சி சோமசுந்தரம் வரவேற்றார். செயலாளர் கே.எஸ்.புகழேந்தி நன்றி கூறினார்.