Published : 04 Jan 2020 05:42 AM
Last Updated : 04 Jan 2020 05:42 AM

பெண்களின் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய மாவட்டங்களில் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’- மத்திய அரசுக்கு சமூகநலத் துறை கடிதம்

சென்னை

பெண்களின் பிரச்சினைகளுக்கு ஒரே இடத்தில் தீர்வு காண புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் ஒன் ஸ்டாப் சென்டர்களை திறக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சமூகநலத் துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களின் பிரச்சினைகளுக்கு ஒரே இடத்தில் தீர்வு காண, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நல அமைச்சகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் ஒன் ஸ்டாப் சென்டரை உருவாக்கியது. தமிழகத்தில் காஞ்சிபுரம், கோயம்புத்தூர், சேலம் , மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு ஒன் ஸ்டாப் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் மூலம் குடும்ப வன்முறை, பாலி யல் வன்கொடுமை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஒரே இடத்தில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின் றன.

பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கு வதற்கு படுக்கை வசதி, உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி களும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. இதற்காக ஒவ்வொரு மையத்தி லும் வழக்கறிஞர், மனநல ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப வல்லுநர், சமையலர் உள்ளிட்டோர் பணியில் உள்ளனர்.

5 மாவட்டங்கள்

இந்நிலையில், தமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர், நெல்லை, விழுப்புரம் மாவட்டங்களைப் பிரித்து கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட் டுள்ளன. புதிய மாவட்டங்களுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரி சமூகநலத் துறை அதிகாரிகள் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நல அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x