

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 36 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், கடந்த 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடந்தது. முதல்கட்ட தேர்தலில் 77.10 சதவீதமும் இரண்டாம்கட்ட தேர்தலில் 77.73 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இருகட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, 315 மையங்களில் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வாக்குச்சீட்டு முறை
வாக்கு எண்ணும் பணியில் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் தலா 3 ஆயிரம் அரசு ஊழியர்கள் வீதம் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்குச்சீ்ட்டு முறையில் தேர்தல் நடந்ததால், அவற்றை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் மாலையில் இருந்து முடிவுகள் ஒவ்வொன்றாக வரத் தொடங்கின. ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கான முடிவுகள் முதலில் வெளியாகின.
அதைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான முடிவுகள் வெளிவரத் தொடங்கின. ஆரம்பத்தில் இருந்தே அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன.
66 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்
நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை, நேற்று மாலை வரை நீடித்தது. வாக்கு எண்ணும் பணிகள் அனைத்தும் 66 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டது.
பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்து திமுக வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்ற நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முடிவை அறிவிக்கவில்லை. சில இடங்களில் முடிவை அறிவித்த பிறகும் வெற்றி சான்றிதழ் வழங்கவில்லை என கூறி திமுகவினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, வாக்கு எண்ணும் பணிகள் முறையாக நடக்கவில்லை; திமுக வேட்பாளர் வெற்றி பெறும் இடங்களில் அதிமுகவினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது என குற்றம்சாட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கோயம் பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமியிடம், நேற்று முன்தினம் 2 முறை நேரடியாக புகார் மனு அளித்தார்.
மாவட்ட தலைவர் பதவிகள்
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் நேற்று மாலை வெளியானது. முதல்நாளில் இரு கூட்டணிகளும் மாறி மாறி முன்னிலை வகித்த நிலையில், முடிவில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
மொத்தமுள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் திமுக கூட்டணி 270 இடங்களிலும், அதிமுக கூட்டணி 242 இடங்களிலும் வெற்றிபெற்றன. தேர்தல் நடந்த 27 மாவட்ட ஊராட்சிகளில் இரு கூட்டணிகளும் தலா 13 மாவட்டங்களில் குழு தலைவர் பதவிகளை பிடிப்பது உறுதியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் இரு கட்சிகளும் சம இடங்களை பிடித்துள்ளன.
அதேபோன்று 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் திமுக கூட்டணி 2,338 இடங்களிலும், அதிமுக கூட்டணி 2,185 இடங்களிலும், அமமுக 95 இடங்களிலும், நாம் தமிழர் கட்சி ஒரு இடத்திலும், இதர கட்சிகள், சுயேச்சைகள் 444 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.மொத்தமுள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் திமுக கூட்டணி 270 இடங்களிலும், அதிமுக கூட்டணி 242 இடங்களிலும் வெற்றிபெற்றன. தேர்தல் நடந்த 27 மாவட்ட ஊராட்சிகளில் இரு கூட்டணிகளும் தலா 13 மாவட்டங்களில் குழு தலைவர் பதவிகளை பிடிப்பது உறுதியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் இரு கட்சிகளும் சம இடங்களை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.