

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு இரண்டு வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் சான்று வழங்கினர். ஒரு பதவிக்கு இரண்டு வேட்பாளர்களுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் பெரிய ஊராட்சி..
சாக்கோட்டை ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சி தமிழகத்தில் பெரிய ஊராட்சியாக உள்ளது. இங்கு மொத்தம் 22,393 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் காரைக்குடியின் விரிவாக்க பகுதியாக இது இருப்பதால் அதிக வருவாய் கொண்ட ஊராட்சியாகவும் உள்ளது.
இங்கு தொடர்ந்து இரண்டு முறை ஊராட்சித் தலைவராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாங்குடி. இந்த ஒன்றியம் இந்த முறை பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டதால் அவரது மனைவி தேவியை நிறுத்தினார்.
அவரை எதிர்த்து தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகி அய்யப்பன் மனைவி பிரியதர்ஷினி போட்டியிட்டார். தேவியை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் நேற்று காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக வாக்கு எண்ணிக்கை மையத்தில் சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
பத்தாயிரத்திற்கு மேல் வாக்குகள் இருந்ததால் வாக்கு எண்ணிக்கை இரவு வரை நீடித்தது. இரவு 9.30 மணிக்கு, தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் அதிகாரியின் சான்றும் வழங்கப்பட்டது.
அவர் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியே புறம்படும் சமயத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பறிக்க முயன்றார். மேலும் பிரியதர்ஷினியும், அவரது ஆதரவாளர்களும் ‘முழுமையாக வாக்கு எண்ணி முடிக்காமல் எப்படி வெற்றி பெற்றதாக சான்று தர முடியும்,’ எனக் கூறி தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம், பிரியதர்ஷினி ஆதரவாளர்கள் மறுவாக்கு நடத்த வேண்டுமென வலியுறுத்தினர். இதையடுத்து மறுவாக்குக்கு தேர்தல் அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். மறுவாக்கு எண்ணிக்கை விடிய, விடிய நடந்தநிலையில் தேவியும், அவரது முகவர்களும் அங்கிருந்து வெளியேறினர்.
63 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி..
இந்நிலையில் பிரிதர்ஷினியும், அவர்களது முகவர்களும் மட்டும் அங்கிருந்தன. அதிகாலை 5 மணிக்கு மறுவாக்கு எண்ணிக்கை முடிந்தது. மொத்தம் பதிவான வாக்குகள் 11,924, பிரிதர்ஷினி பெற்ற வாக்ககள் 5871, தேவி பெற்ற வாக்குகள் 5808. இதையடுத்து 63 வாக்குகள் வித்யாசத்தில் பிரிதர்ஷினி வென்றதாக அறிவித்து, அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினர்.
ஒரு பதவிக்கு இரண்டு வேட்பாளர்களுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தேவிக்கு ஆதரவாக காங்கிரஸ் தொண்டர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு வாக்கு எண்ணும்போது அலுவலர்கள் ஒரு பெட்டியை எண்ணாமல் தேர்தல் முடிவுகளை அறிவித்துவிட்டனர். அதனால் இந்த குழப்பம் ஏற்பட்டது. மீண்டும் வாக்குகள் எண்ணியபோது முடிவு மாறிவிட்டது. இதனால் இரண்டாவது நபருக்கும் சான்று கொடுக்க வேண்டியதாயிற்று,’ என்று கூறினர்.