

தொடர் நஷ்டத்தினால் கூட்டுறவு பெட்ரோல் பங்க்குகள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள சூழலில் தற்போதுள்ள பங்க்குகளுக்கு பல கோடி பாக்கியுள்ளதால் அரசு வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் சிக்கல் எழுந்துள்ளது. இச்சூழலில் அமைச்சர் காருக்கும் எரிபொருள் நிரப்ப மறுத்த நிகழ்வு புதுச்சேரியில் நடைபெற்றது.
புதுச்சேரியில் அமைச்சர்கள், வாரியத் தலைவர்கள், தலைமைச் செயலர் உட்பட 15-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள், செயலர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு அரசு வாகனங்கள் உள்ளன. இவ்வாகனங்களுக்கு கூட்டுறவு நிறுவனங்களான பாப்ஸ்கோ, கான்பெட், அமுதசுரபி பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் நிரப்பி வந்தனர்.
இதில் பாப்ஸ்கோ பெட்ரோல் பங்க்குகள் முதலில் நஷ்டத்தால் மூடப்பட்டது. தற்போது கான்பெட் பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டு விட்டன. இரண்டும் செயல்படாத சூழலில் தற்போது இயங்கி வரும் அமுதசுரபி பெட்ரோல் பங்க்குகளுக்கு பல கோடி பாக்கியை அரசு தரப்பில் வைத்துள்ளதால் இனி எரிபொருள் தருவதில்லை என்று முடிவு எடுத்துள்ளனர்.
அமைச்சர் காருக்கும் மறுப்பு
புதுச்சேரி அரசின் அமுதசுரபி பெட்ரோல் பங்க்குகளில் ஈசிஆர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் அமைச்சர்களின் கார்களுக்கு கடனில் எரிபொருள் நிரப்புவது வழக்கம். இந்த கடன் பாக்கி மட்டும் 2 கோடியே 30 லட்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் அமைச்சர்களின் கார்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியாது என அரசு நிறுவனமான அமுதசுரபி அறிவித்துள்ளது. இதனால் அமைச்சரின் கார்களுக்கு கடனில் எரிபொருள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதை அறியாமல் நேற்று (ஜன.2) இரவு கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனின் வாகனம் எரிபொருள் நிரப்ப வந்தபோது மறுக்கப்பட்டதால் ஊழியர்களுக்கும் அமைச்சரின் ஓட்டுநருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனிடையே நிர்வாகம் தரப்பில் கடந்த 30-ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு துறை சார்ந்த நிறுவனங்களின் வாகனங்களுக்கு பெட்ரோல்-டீசல் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளதாக அமுதசுரபி தரப்பினர் காட்டுகின்றனர்.
இது தொடர்பாக அரசு வட்டாரத் தரப்பில் விசாரித்தபோது, "அரசு வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல கோடி பாக்கியுள்ளதால் எரிபொருள் தருவதில்லை என்று அமுதசுரபி தரப்பில் முடிவு எடுத்துள்ளனர். அதனால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் தனியார் தரப்பிலும் பேசி வருகின்றனர்" என்று தெரிவித்தனர்.
அமைச்சர் பேருந்தில் பயணம்
இந்நிலையில் இன்று (ஜன.3) மதியம் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு அமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகமான பிஆர்டிசி பேருந்தில் வந்தார். காரில் எரிபொருள் நிரப்ப மறுத்ததால் எதிர்ப்பு தெரிவித்து பயணமா என்று கேட்டதற்கு, அவர் மறுத்தார்.
"முன்பெல்லாம் பேருந்தில்தான் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு வருவேன். பின்னர் காரில் வரத் தொடங்கினோம். பேருந்தில் வர விருப்பம் இருந்தது. நீண்ட நாள் ஆனதாலும், அனுபவத்துக்காகவும் வந்தேன். எவ்வித எதிர்ப்புக்காகவும் அல்ல" என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.