

அதிமுக, திமுக கூட்டணிகள் சமபலத்தில் இருப்பதால், சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்றுவதில் இழுபறி நீடிக்கிறது. இதனால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 16 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் அதிமுக கூட்டணியில் அதிமுக 12 இடங்கள், பாஜக, மூவேந்தர் முன்னணி கழகம், முக்குலத்தோர் புலிப்படை, தேமுதிக ஆகியவற்றிற்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டன.
அதேபோல் திமுக கூட்டணியில் திமுக-10, காங்கிரஸ்-4, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியற்றிற்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டன. அதிமுக, திமுக நேரடியாக 8 இடங்களில் போட்டியிட்டன.
அதிமுக 8 இடங்கள், திமுக 5 இடங்கள், காங்கிரஸ் 2 இடங்கள், இந்திய ஜனநாயக கட்சி ஒரு இடம் என திமுக கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றன. அதிமுக, திமுக நேரடியாக மோதிய 8 இடங்களில் அதிமுக 5, திமுக 3 கைப்பற்றின. மேலும் அதிமுக, திமுக கூட்டணி இரண்டும் 8 இடங்களில் கைப்பற்றி சமபலத்தில் உள்ளன.
இதனால் ஆளும் கட்சியினர் திமுக கூட்டணி கட்சியில் வெற்றி பெற்றவர்களை தங்களுக்கு சாதகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஆளும்கட்சியினருக்கு பின்னடைவு ஏற்பட்டதால், தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணி சம வாக்குகள் பெறும். இதையடுத்து குலுக்கல் முறையில் தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.