Published : 03 Jan 2020 15:08 pm

Updated : 03 Jan 2020 15:08 pm

 

Published : 03 Jan 2020 03:08 PM
Last Updated : 03 Jan 2020 03:08 PM

அதிமுகவுக்குப் பாடம் கற்பிக்க மக்கள் தயாராகி விட்டார்கள்; பெருவெற்றியைத் தந்த மக்களுக்கு நன்றி: ஸ்டாலின்

people-are-ready-to-teach-the-aiadmk-thanks-to-the-great-people-stalin

உள்ளாட்சியில் நடந்து வரும் ஊழலாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, திமுக கூட்டணியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சிறப்போடும், நியாயமாகவும் நேர்மையோடும் செயல்படுவார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

''நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியின் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை ஆகிய எதிர்மறைக் கூறுகளை மீறி திமுக கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. உள்ளபடியே இது நமக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தி ஆகும்.

எத்தகைய அராஜகத்தையும், அடாவடிகளையும் மீறி வெற்றி பெறும் வல்லமை மாபெரும் மக்கள் சக்திக்கு உண்டு என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் மெய்ப்பித்துக் காட்டி இருக்கின்றன. திமுக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், கொண்டுள்ள விருப்பமும், ஆளும் கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பும் இதன் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே, அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டும். மக்களைச் சந்திக்கப் பயந்து தயங்கிய அதிமுக அரசு, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வந்தது.

மக்களைச் சந்திக்க ஒரு பக்கம் பயம் என்றால், உள்ளாட்சி அமைப்புகளில் ஏராளமான திமுக பிரதிநிதிகள் வந்துவிட்டால் தங்களின் அநியாய - அன்றாடக் கொள்ளைகளைத் தொடர முடியாது என்ற நினைப்பு இன்னொரு பக்கம். இந்த இரண்டு காரணங்களால்தான் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்தார்கள்.

உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், அதுவும் முறைப்படி நடத்த வேண்டும் என்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் திமுக சார்பில் வழக்குகளைத் தாக்கல் செய்தோம். நீதிமன்றம் விதித்த கடுமையான கட்டுப்பாடுகள், உத்தரவுகள் காரணமாகத்தான், இப்போது இந்தத் தேர்தலை நடத்தியுள்ளது தமிழக தேர்தல் ஆணையம்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 27, 30 ஆகிய நாட்களில் நடந்தது. மொத்தம் உள்ள 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மாவட்டக் கவுன்சிலர்களுக்கான மொத்த இடங்கள் 515. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கான மொத்த இடங்கள் 5,090. கட்சி ரீதியாக நடைபெற்ற இப்பதவி இடங்களுக்கான தேர்தலில் பெரும்பான்மை இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக கூட்டணி முன்னணியில் இருந்தது. இதனை ஆளும் கட்சியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தேர்தல் ஆணையத்தின் துணையோடு, திமுகவின் வெற்றியைத் தடுக்கச் சதி செய்தார்கள். திமுகவின் வெற்றியை அறிவிக்கத் தயங்கினார்கள். மறைக்கத் திட்டமிட்டார்கள். சொல்லப் போனால், திமுக வெற்றி பெற்ற இடங்களையே அதிமுக வெற்றி பெற்ற இடங்களாக மாற்றி அறிவிக்கவும் செய்தார்கள்.

நேற்றைய தினம் மதியம் 2 மணிக்கு மாநிலத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து முறையிட்டேன். 'சேலம் மாவட்டத்திலேயே திமுக வெற்றி பெறுகிறது. முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால் தயங்குகிறீர்களா? இந்தச் சதிச் செயல்கள் நிறுத்தப்படாவிட்டால் தேர்தல் ஆணையத்திலேயே உண்ணாவிரதம் இருப்பேன்' என்று சொல்லிவிட்டு வந்தேன். மாலையிலாவது நிலைமை மாறிவிடும் என்று பார்த்தால் மாறவில்லை.

எனவே, நள்ளிரவு 11 மணிக்கு மீண்டும் தேர்தல் ஆணையம் சென்று ஆணையரைச் சந்தித்தேன். அப்போதும் அவர்களது செயல்பாட்டில் மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆளும் கட்சியின் அராஜகம், தேர்தல் ஆணையத்தின் அலட்சியம் தொடரத்தான் செய்கிறது. இதனையும் மீறி திமுக கூட்டணி மிகப் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று வருகிறது.

வெற்றி பெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளை மனமார வாழ்த்துவதுடன், திமுக கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உள்ளாட்சியில் நடந்து வரும் ஊழலாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, திமுக கூட்டணியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சிறப்போடும், நியாயமாகவும் நேர்மையோடும் செயல்படுவார்கள். மக்கள் நலத்திட்டங்களை உண்மையாகவும், முழுமையாகவும் மக்களுக்குப் பயன்பெறும் திட்டங்களாக மாற்றுவார்கள் என்று உறுதி அளிக்கிறேன்.

இந்தத் தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் மாவட்டங்கள் வாரியாக முகாமிட்டும், பணத்தை வாரி இறைத்தும் அவர்களுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் மீது எந்த அளவுக்கு மக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள் என்பதற்குச் சில உதாரணங்களை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவின் மகள் தோல்வியடைந்துள்ளார். மானாமதுரை அதிமுக எம்எல்ஏ நாகராஜின் மனைவி தோல்வியைத் தழுவியுள்ளார். மண்ணச்சநல்லூர் அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் தோற்றுள்ளார்.

சேந்தமங்கலம் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரனின் மகன் தோற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டு, அது பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கும் ஆளும் கட்சி மீது மக்களுக்கு உள்ள கோபத்தின் வெளிப்பாடே ஆகும். இதிலிருந்து ஆளும் கட்சியினர் பாடம் கற்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், அதிமுகவுக்குப் பாடம் கற்பிக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதன் உறுதியான அடையாளம்தான் இது.

இந்தத் தேர்தலில் சில நம்பிக்கை நிறைந்த காட்சிகளும் இருந்தன. திருப்பூர் மாவட்டத்தில் 82 வயது மூதாட்டியும், மேலூரில் 79 வயது மூதாட்டியும், தோவாளையில் 73 வயது மூதாட்டியும் வெற்றி பெற்றுள்ளார்கள். கிருஷ்ணகிரியில் 21 வயது கல்லூரி மாணவி வெற்றி பெற்றுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் கான்சாபுரத்தில் துப்புரவுத் தொழிலாளியான பெண் ஒருவர், தான் வேலை பார்த்த ஊராட்சிக்கே தலைவி ஆனது மக்களாட்சியின் மாண்புக்கு உதாரணம் ஆகும். திருச்செங்கோடு ஒன்றியக் கவுன்சிலர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா பெற்றுள்ள வெற்றி, விளிம்பு நிலை மக்கள் அதிகாரம் பெறத் தொடங்கியதன் அடையாளம்.

‘உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்’, ‘உடனடியாக நடத்த வேண்டும்’, ‘முறையாக நடத்த வேண்டும்’ என்று திமுக சார்பில் சொல்லி வந்ததற்குக் காரணம் இதுதான். இதனை ஆளும்கட்சி விரும்பவில்லை. தனது ஊழல், முறைகேடுகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் இடையூறாக இருப்பார்கள் என்பதால் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்தார்கள். அதனையும் முழுமையாக நடத்தாமல் அரைகுறையாக நடத்தினார்கள்.

நகர்ப்புற ஊராட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தி இருந்தால் திமுக இன்னும் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கும். இன்னும் முழுமையான முடிவுகள் வராத நிலையில், இதுவரை வெளியான முடிவுகளில் பெரும்பான்மை வெற்றியை திமுக கூட்டணிக்குக் கொடுத்திருக்கும் தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


PeopleReady to teachAIADMKThanksGreat peopleStalinஅதிமுகபாடம் கற்பிமக்கள்தயாராகி விட்டார்கள்பெருவெற்றிநன்றிஸ்டாலின்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author