

பிணம் தின்னும் அரசியலை நடத்தியது பாஜகதான் என, முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி அளித்துள்ளார்.
இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (ஜன.3) வெளியிட்ட அறிக்கையில், "சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் வரலாறு காணாத வெற்றி பெற்று வருவதை சகித்துக் கொள்ள முடியாத முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமது இயல்புக்கு மாறாக, திமுக, காங்கிரஸ் கட்சிகளின் மீது சாபமிட்டுப் பேசியிருக்கிறார்.
திமுகவும் காங்கிரஸும் பிணம் தின்னும் அரசியல் செய்கின்றன என்று கூறியதோடு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் அழிவுக்கு ஆளாவர்கள் என்றும் பேசியிருக்கிறார். விரக்தியின் விளம்பிலும், வீழ்ச்சிப் பள்ளத்திலும் இருந்து கொண்டு பேசுவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்திய நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்தும், பாகிஸ்தான் பிரிவினையிலிருந்தும் ஏற்பட்ட வரலாறு காணாத கலவரத்தை மதரீதியாகத் தூண்டிவிட்டுப் பிணம் தின்னும் அரசியல் நடத்தியது யார் என்பது வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும். இதையொட்டி, வடமாநிலங்களில் வகுப்புக் கலவரத்திற்கு வியூகம் வகுத்தவர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் என்பதையும் எவரும் மறுக்க முடியாது.
450 ஆண்டு கால பாபர் மசூதியை இடித்துவிட்டு, ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று எல்.கே.அத்வானி தலைமையில் ரத யாத்திரை நடத்தி, நாடு முழுவதும் மதக் கலவரத்தைத் தூண்டியது யார்? இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு யார் பொறுப்பு? கோத்ரா ரயில் எரிப்பில் எந்தத் தொடர்பும் இல்லாத ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது தடுத்து நிறுத்தாத அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் இன்றைக்கு பாஜகவின் பிரதமர். இத்தகைய பிணம் தின்னும் அரசியலை நடத்திய பாஜகவினர் இன்றைக்கு ஊருக்கு உபதேசம் செய்வதற்கு எந்தத் தகுதியும் இல்லை.
பல்வேறு மதம், சாதி, இன வேறுபாடுகளைக் கடந்து வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மதநல்லிணக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிற இந்திய மண்ணில், மதவெறியைத் தூண்டுகிற விஷவித்துகளைத் தூவி, அரசியல் ஆதாயம் தேடுவது பாஜகவின் தலையாய கொள்கையாகும். 2014, 2019 மக்களவைத் தேர்தலில் ஒரு முஸ்லிமுக்குக் கூட போட்டியிட வாய்ப்பு வழங்க மறுத்த பாஜக, முத்தலாக் சட்டத்தையோ, குடியுரிமைச் சட்டத் திருத்தத்தையோ கொண்டு வருவதற்கு என்ன உரிமை இருக்கிறது?
முஸ்லிம்களை இந்தியாவில் இரண்டாந்தர குடிமக்களாக நடத்த வேண்டுமென்ற கோல்வால்கர் தத்துவத்தை நடைமுறைப்படுத்த முயல்கிற பாஜகதான் பிணம் தின்னும் அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றது. இதை இன்றைக்கு இந்திய மக்கள் ஓரணியில் திரண்டு முறியடித்து வருகிறார்கள். இதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாத பொன்.ராதாகிருஷ்ணன், திமுக, காங்கிரஸ் மீது சாபமிட்டுப் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.