

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் உள்ள 225 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான இடங்களில் திமுக 111, காங்கிரஸ் 13, இடதுசாரி 3, மதிமுக 1 என திமுக கூட்டணி 128 இடங்களிலும், அதிமுக 69, பாஜக 2, தேமுதிக 1 என அதிமுக கூட்டணி 72 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதில், அறந்தாங்கி ஒன்றியத்தில் 3 இடங்களுக்கு முடிவு அறிவிக்கப்படவில்லை.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த டிச.27, டிச.30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று (ஜன.2) தொடங்கி இன்றும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் அன்னவாசல், குன்றாண்டார்கோவில், பொன்னமராவதி, விராலிமலை, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம் ஆகிய ஒன்றியங்களில் திமுக கூட்டணியும், திருமயத்தில் அதிமுக கூட்டணியும் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
புதுக்கோட்டை, அரிமளம், அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி ஆகிய இடங்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதில், மணமேல்குடி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 15 இடங்களில் ஒரு இடத்தில்கூட அதிமுக வெற்றிபெறவில்லை.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் தொகுதியான விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியங்களில் திமுகவே பெரும்பான்மை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று, மொத்தம் உள்ள 22 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி இடங்களில் 13 இடங்களில் திமுக கூட்டணியும், 9 இடங்களில் அதிமுக கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் திமுக கூட்டணி பெரும்பான்மையைப் பெற்றுள்ளதால் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பதவியை திமுகவே கைப்பற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி அநேக இடங்களைக் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.