Published : 03 Jan 2020 12:09 PM
Last Updated : 03 Jan 2020 12:09 PM

இன்னும் 50% வாக்குகள் எண்ணப்படவில்லை; தேர்தல் ஆணையம் பாராமுகமாகச் செயல்படுகிறது: குற்றச்சாட்டுகளை அடுக்கும் டி.ஆர்.பாலு

தேர்தல் ஆணையம் பாராமுகமாகச் செயல்படுகிறது என, மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாநிலத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் இன்று (ஜன.3) டி.ஆர்.பாலுவும், சென்னை, கோயம்பேட்டில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான புகார் மனுவை தேர்தல் ஆணையரிடம் வழங்கினார்.

அதன்பிறகு, டி.ஆர்.பாலு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"நேற்று இரவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் முக்கியத் தலைவர்களும் மாநிலத் தேர்தல் ஆணையத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒழுங்கீனங்களை எடுத்துச் சொன்னார்கள். அதற்குப் பிறகும் பல இடங்களில், தொடர்ந்து தேர்தல் முடிவுகள் தவறாக அறிவிக்கப்படுகின்றன. இல்லையென்றால், தேர்தல் முடிவுகளை அறிவிக்காமல் உள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தாலும் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை.

குறிப்பாக, ராமநாதபுரத்தில், மாவட்ட வார்டுகள் 7, 14 ஆகியவற்றில் வாக்கு எண்ணிக்கை நேற்று இரவே முடிந்துவிட்டது. இதில், திமுக வேட்பாளர்கள் வென்றதால் இதுவரை சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. அங்கு நேற்று இரவு முழுவதும் தொண்டர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

அதேபோல், முதுகுளத்தூர் வார்டு எண் 10-ல் மொத்தம் பதிவான வாக்குகள் 3,420. ஆனால், எண்ணப்பட்டதோ 3,020 வாக்குகள் மட்டும் தான். 400 வாக்குகள் அடங்கிய பெட்டி கொண்டு வரப்படவில்லை. இருந்தவற்றை மட்டும் எண்ணி முடிவை அறிவித்துள்ளனர்.

கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்தில், 1, 12, 15, 16 ஆகிய 4 வார்டுகளிலும், நேற்றிரவே வாக்குகள் எண்ணப்பட்டு விட்டன. ஆனால், முடிவு அறிவிக்கப்படவில்லை என, இரவு முழுவதும் பொதுமக்கள், தொண்டர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். வாக்குகள் எண்ணப்பட்ட உடனேயே சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் விதி. அதை ஏன் நிலுவையில் வைக்கின்றனர்?

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஒன்றியத்தில் வார்டு எண் 16-ல் இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

எங்களுடைய கட்சி அலுவலகத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், தேர்தல் ஆணையம் இதுபோன்று பாராமுகமாக இருக்கக்கூடாது. தொடர்ந்து நாங்கள் இங்கு வந்துகொண்டிருக்கிறோம். வழக்கறிஞர்கள் இதே வேலையாக இருக்கின்றனர். தேர்தல் ஆணையம் மீது குற்றம் சாட்ட நான் விரும்பவில்லை. குற்றம் சாட்டாமல் இருக்கவும் முடியவில்லை. தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர். இதனை தேர்தல் ஆணையத்திடமும் சொன்னேன். தேர்தல் முடிவுகளை நேர்மையாக அறிவிக்குமாறு வலியுறுத்தியிருக்கிறோம்.

இது தொடர்பான புகார்களை அந்தந்த பகுதிகளிலும் தேர்தல் அலுவலர்களிடம் வழங்கச் சொல்லியிருக்கிறோம். அவைதான் எங்களுக்கு ஆவணங்கள். அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். தொடர்ந்து வழக்கை சந்திப்போம்".

இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

அப்போது, வாக்கு எண்ணும் மையங்களில் திமுகவினர் வன்முறையில் ஈடுபடுவதாக, அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் குற்றம் சாட்டியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த டி.ஆர்.பாலு, "பொன்னையன் பேசுவதெல்லாம் ஒரு பேச்சா? அவரை ஒரு மிகப்பெரிய அரசியல்வாதியாக நினைத்துக் கேட்கிறீர்கள். வருத்தமாக இருக்கிறது.

தேர்தல் ஆணையம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது எனத் தெரியவில்லை. முதல்வர், உயரதிகாரிகளின் கட்டுப்பாட்டில் கூட இருக்கலாம். தலைவர் ஸ்டாலின் ஒவ்வொரு விஷயத்தையும் மிக மிக நுணுக்கமாகக் கையாள்கிறார். நேற்று அவரே தேர்தல் ஆணையத்திற்கு வந்தது மூலம், அவர் தன் தொண்டர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார். 'கவனமாக இருங்கள்' என்பதுதான் அந்தச் செய்தி.

இன்னும் 50% வாக்குகள் எண்ணப்படவில்லை. அதிலாவது சரியாக நடந்தால், நாங்கள் 'மறப்போம் மன்னிப்போம்'. இல்லையென்றால் இதனை சட்ட ரீதியாக முன்னெடுப்போம்.

திமுகவின் வளர்ச்சி தமிழகத்தில் மட்டும் நிற்கவில்லை. தேசியத் தலைவர்கள் ஸ்டாலினின் செயல்பாடுகளைக் கவனிக்கின்றனர். தேசிய அளவில் ஒரு தலைவருக்கு என்ன மரியாதை கொடுப்பார்களோ அதை ஸ்டாலினுக்குக் கொடுக்கின்றனர். கருணாநிதி காலத்தில் இருந்ததை விட 10% அதிக வளர்ச்சியை திமுக அடைந்துள்ளது" என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x