அதிமுக பெண் எம்எல்ஏ வீட்டில் 3 நாய்கள் மர்மமாக உயிரிழப்பு

அதிமுக பெண் எம்எல்ஏ வீட்டில் 3 நாய்கள் மர்மமாக உயிரிழப்பு
Updated on
1 min read

வீரபாண்டி தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ வீட்டில் மூன்று நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ மனோன்மணி. இவர் பனமரத்துப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாரப்பட்டி, சோலைக்கவுண்டர் தோட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் புத்தாண்டை முன்னிட்டு மனோன்மணி தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று விட்டு, நண்பகலில் வீடு திரும்பினார்.

அப்போது, அவரது வீட்டில் இருந்த 3 நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மல்லூர் காவல் நிலையத்தில் மனோன்மணி புகார் செய்ததையடுத்து, போலீஸார் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். நாய்களின் உடலை கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்ததில் நாய்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

மேலும், நாய்களின் உடற்கூறுகள் பரிசோதனைக்கு சென்னை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து வரும் அறிக்கை மூலமே, என்னமாதிரியான விஷம் நாய்களுக்கு கொடுக்கப்பட்டது என்பது தெரியவரும்.

மனோன்மணிக்கு கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது வீட்டு நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நாய்கள் கொலை செய்யப்பட்டனவா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in