

கோவை மாவட்டம் அரசூர், பதுவம்பள்ளி ஊராட்சிகளில் பதிவானவாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டியை மூடி வைத்திருந்த சாக்குப்பைகள் மாயமாகி விட்டதா கவும், முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் புகார் தெரிவித்தனர்.
சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசூர் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இங்கு பதிவான வாக்குகள் வாக்குப்பெட்டிகளில் வைக்கப்பட்டு, அவற்றை சாக்குப்பைகளில் மூடி அரசு மற்றும் வேட்பாளர்களின் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. சூலார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் அவை பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்தன.
வாக்கு எண்ணிக்கைக்காக அவற்றை வாக்கு மையத்துக்கு கொண்டுவந்தபோது, சாக்குப் பைகள் இல்லாமல், வெறும் பெட்டியை மட்டும் கொண்டு வந்துள்ளனர். இதைப் பார்த்த திமுக, சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள், சாக்குப் பைகள் மாயமானது குறித்து கண்டனத்தைத் தெரிவித்ததுடன், முறைகேடு நிகழ்ந்திருக்கலாம் என்று கூறி வாக்கு எண்ணிக்கை மைய அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஏராளமான போலீஸார் அங்கு பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டனர். இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ராசாமணியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் பிற்பகல் ஒன்றரை மணிக்குப் பிறகே அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதேபோல, சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பதுவம் பள்ளி ஊராட்சியின் வாக்குப் பெட்டிகளும், சாக்கு மூட்டைகள் இல்லாமல், கிழிந்த சாக்குமூட்டை களுடனும் இருந்துள்ளன. இதையடுத்து, வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை நடத்த எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டம் நடத்தினர். வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
பின்னர் சூலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் நவமணி, வட்டாட்சியர் மீனாகுமாரி, காவல் ஆய்வாளர் தங்கராஜ் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் மூன்றரை மணி நேரத்துக்குப் பிறகு 11.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்தப் பிரச்சினைகளையொட்டி வாக்குப்பதிவு மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.