

திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் 20-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு செல்வராணி என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டார். அன்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றபோது, பிற்பகலுக்குப் பிறகு வாக்குச்சீட்டில் செல்வராணியின் பெயர், சின்னம் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது.
தகவலறிந்த செல்வராணி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்பதிவு அலுவலர், லால்குடி வட்டாரவளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டதையடுத்து 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
தேர்தல் அலுவலரிடம் மனு
பின்னர், லால்குடி ஒன்றியம் 20-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான வாக்குப்பதிவை மீண்டும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் செல்வராணி மனு அளித்ததாக தெரிகிறது.
இந்நிலையில், குமுளூர் அரசு வேளாண்மை பொறியியல் கல்லூரி - ஆராய்ச்சி நிறுவனத்தில் லால்குடி ஒன்றியத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், செல்வராணி வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் நுழைந்து வாக்குஎண்ணிக்கையை நிறுத்த முயன்றதாக கூறப்படுகிறது.
இயடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸார் அவரைத் தடுத்துநிறுத்த முயன்றனர். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது செல்வராணி தாக்கப்பட்டார். தொடர்ந்து, செல்வராணியை போலீஸார் அங்கிருந்து வெளியேற்றினர்.