

விருத்தாசலம் ஒன்றியம் சிறுவம்பார் 1-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு 6 பேர் போட்டியிட்டனர்.
மொத்தம் 3,663 வாக்குகள் பதிவானது. இதில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஆனந்தகண்ணன் 982 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், 954 வாக்குகளை பெற்ற அதிமுக வேட்பாளர் அர்ஜூனன் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் துணை அதிகாரி அறிவித்தார்.
உடனே இதர வேட்பாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு நிலவியது. 982 வாக்குகள் பெற்ற சுயேச்சை வேட்பாளர் ஆனந்த கண்ணன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இதையடுத்து இந்த வார்டுக்குமறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வேட்பாளர்கள் அமைதியாயினர். இதைத் தொடர்ந்து மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இரவு 8 மணியளவில் சுயேச்சை வேட்பாளர் ஆனந்த கண்ணன் 28 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.