

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில் முதல்வரின் உறவினருக்கு வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல அனுமதி வழங்கியதை கண்டித்து, திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சங்ககிரி ஊராட்சி ஒன்றிய பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி, சங்ககிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இங்கு ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 14 ஒன்றிய வார்டு உறுப்பினர், 24 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டன.
இந்த மையத்துக்குள் முதல்வர் பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேசன் உள்ளே சென்று பார்வையிட்டு கண்காணித்தார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
“வேட்பாளரின் முகவருக்கான அங்கீகாரம் பெற்று வெங்கடேசன் வாக்கு எண்ணும் மையத்துக்குள் வந்துள்ளதால், அவரை வெளியேற்ற முடியாது” என அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் அறிந்த திமுக மேற்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்தார். அவருக்கு வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
“முதல்வரின் உறவினர் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்தால், தேவையில்லாத பதற்றம் ஏற்படும். வாக்கு எண்ணப்பட்டு முடிவுகளை அதிகாரிகள் சுதந்திரமாக அறிவிக்க முடியாது.
தேவூரில் வசிப்பவர், சங்ககிரி வாக்கு எண்ணும் மையத்துக்குள் உள்நோக்கத்துடன் வந்துள்ளார். எனவே, அவரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும்” எனதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் வலியுறுத்தினார். இதையடுத்து, அதிகாரிகள் சமரசமாக பேசி பிரச்சினையை முடித்து வைத்தனர்.