மதுவால் சீரழியும் தமிழகம்: வைகோ வேதனை

மதுவால் சீரழியும் தமிழகம்: வைகோ வேதனை
Updated on
1 min read

‘மதுவின் கோரப்பிடியிலிருந்தும் மூடநம்பிக்கை, ஒழுக்கக்கேடு, பண்பாடு அழிவு போன்றவற்றாலும் தமிழகம் சீரழிந்து வருகிறது. இவற்றிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும்’ என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

ஈரோடு மாவட்ட மதிமுக சார்பில் திராவிட இயக்க கருத்துபட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மூடநம்பிக்கை, ஒழுக்கக்கேடு, பண்பாடு அழிவு போன்றவற்றால் தமி ழகம் சீரழிந்து வருகிறது. இதிலிருந்தும் மதுவின் கோரப்பிடியில் இருந்தும் தமிழ கத்தை மீட்க வேண்டும். காந்தியவாதி சசிபெருமாள் தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வர போராடி போராட்டகளத்தில் உயிர் நீத்தார்.

முதல் கட்டமாக தமிழகத்தில் மது கடைகளின் நேரம் மாற்றம், பள்ளி, கல்லூரிகள், ஆலயங்கள் அருகில் உள்ள மதுக்கடைகள், பார்கள், நெடுஞ்சாலை களில் உள்ள மதுக்கடைகள் மூடப்படும் என்று தமிழக முதல்வர் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தில் அறிவிக்க உள்ளதாக தெரிகிறது.

மதுக்கடைகளின் நேரத்தை குறைத்தால், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மதுவை வாங்கும் நிலை ஏற்படும். எனவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது அவரை காத்திருந்து முதல்வர் ஜெயலலிதா வரவேற்றார். ஆனால், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இறுதி சடங்கில் அவர் ஏன் கலந்து கொள்ளவில்லை. மதுரை வந்தாவது கலாம் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி இருக்கலாம். அப்போது, அவரது உடல் நிலை சரியில்லை என்று கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடியும், முதல்வர் ஜெயலலிதாவும் சந்தித்தபோது ஈழ தமிழர்களை பற்றி இருவரும் என்ன பேசினார்கள் என்பதை வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in