

தமிழக சட்டப்பேரவை ஜன.6-ம் தேதி கூடும் நிலையில், சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் உரிமைகள் சட்ட திருத்தம் உள்ளிட்ட 6 சட்ட திருத்தங்களுக்காக கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டங்கள் பேரவையில் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜன.6-ம் தேதி தொடங்குகிறது. முதல்நாளில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேரவையில் உரையாற்றுகிறார். அதன்பின், பிற்பகலில் பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். பெரும்பாலும், வெள்ளிக்கிழமை (ஜன.10) வரை பேரவைக்கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தொடரில் சட்டப்பேரவை கூட்டம் இல்லாத காலகட்டங்களில் ஆளுநரின் உத்தரவைப் பெற்று கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டங்களுக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டு சட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
அந்த வகையில், சொத்து உரிமையாளர், வாடகைதாரர்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டம், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள், ஊராட்சிகள், நகராட்சிய சட்டங்களில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் தொடர்பான அவசரச் சட்டங்கள், தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்துதல் சட்ட திருத்தத்துக்கான அவசரச் சட்டம், தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி திருத்த அவசரச் சட்டம் ஆகியவற்றுக்கு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக பேரவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.