

திமுக சார்பில் போட்டியிட்ட முதுகலை முதலாமாண்டு படிக்கும் மாணவி பிரீத்தி மோகன் 2,203 வாக்குகள் பெற்று ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிச.27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூவனூர் சுக்கம்பட்டி பஞ்சாயத்து 3-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் முதுகலை முதலாமாண்டு படிக்கும் மாணவி பிரீத்தி மோகன் போட்டியிட்டார். தேர்தலில் 2,203 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கே.என்.தொட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட அக்கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி (21) வெற்றி பெற்றார். இவர் தனியார் கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளங்கலை படிக்கும் மாணவி, முதுகலை படிக்கும் மாணவி என கல்லூரி மாணவிகள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.