

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தந்தை வெற்றி பெற்றதை உற்சாகமாகக் கொண்டாடிய மகன் திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
தமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிச.27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் திருப்பூர் மாவட்டம், பொள்ளிகாளிபாளையம் கிராமப் பஞ்சாயத்து 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட சுப்பிரமணியம் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதும், அவரது மகன் கார்த்தி (21) மத்தளம் அடித்து ஊர்வலமாக வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்நிலையில் உற்சாக மிகுதியுடன் காணப்பட்ட கார்த்தி, திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
தந்தையின் வெற்றியைக் கொண்டாடப் போய் மகன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.