

தன்னை ஊராட்சித் தலைவராக்க வேண் டும் என விரும்பிய மகன் இறந்த நிலை யில், மகனின் விருப்பத்தை கிராம மக்கள் நிறைவேற்றி உள்ளனர் என 73 வயதில் ஊராட்சித் தலைவரான மூதாட்டி உருக்கத்துடன் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 429 ஊராட்சி தலைவருக்கான தேர்தலில் 50 பேர் போட்டியின்றித் தேர்வாகினர்.
எஞ்சிய 379 பேரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. இதில் கமுதி ஒன்றியம் ஏ.தரைக்குடி ஊராட்சியில் காயாம்பு மனைவி தங்கவேலு (73) போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராமலிங்கம் மனைவி மலர்க்கொடி (52) என்பவரை 64 வாக்குகள் வித்தியாசத்தில் தோல் வியடையச் செய்தார்.
தோல்வியடைந்த மலர்க்கொடி 1996 முதல் 2006 வரை 10 ஆண்டுகள் ஊராட்சித் தலைவராக இருந்தார். மேலும் இந்த ஊராட்சி கடந்த 10 ஆண்டுகளாக ஆதிதிராவிடர் இட ஒதுக்கீட்டில் இருந்தது. அப்போதும் மலர்க்கொடியின் ஆதரவாளரே ஊரா ட்சித் தலைவராக இருந்தார். 2016-ல் இவ்வூராட்சி பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனால் தங்கவேலுவின் மகன் சித்தன் (45) தனது தாயாரை இவ் வூராட்சியில் போட்டியிடச் செய் தார். அப்போது தேர்தல் ரத்து செய் யப்பட்டுவிட்டது. கமுதி ஊராட்சி ஒன் றியத்தில் உதவியாளராகப் பணிபுரிந்த சித்தன் கடந்த ஓராண்டுக்கு முன் இறந்து விட்டார்.
மூதாட்டி தங்கவேலுவின் 2 மகள்க ளுக்கும் திருமணமாகிவிட்டது. கணவர் காயாம்பு 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடன் வசித்த மகனும் இறந்ததால் தங்கவேலு தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் தேர்தல் அறி விக்கப்பட்டதும், மகனின் ஆசையை நிறைவேற்ற தங்கவேலுவும், அவரது கிராம மக்களும் விரும்பினர். அதனால் தங்கவேலு வயதை ஒருபொருட்டாகக் கருதாமல் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். அதற்கு ஊராட்சியில் உள்ள 7 கிராம மக்களில் பெரும்பான்மை மக்கள் ஆதரவு இவருக்கு கிடைத்தது. அதனால் முடிந்தளவு எல்லா கிராமங்களுக்கும் சென்று வாக்குச் சேகரித்தார்.
இது குறித்து மூதாட்டி தங்க வேலு ‘இந்து தமிழ் திசை'யிடம் கூறியதாவது: எனது மகன் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றியதால் எங்கள் ஊராட்சி மக்களுக்கு அரசு நலத்திட்டங்களைப் பெற்றுத் தரு வது, கிராமங்களில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது போன்ற சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அதனால் எனது மகன் இறந்தாலும் என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என கிராம மக்கள் செயல்பட்டனர். அவர்களது விருப்பம் நிறைவேறியுள்ளது. அதனால் கிராம மக்களுக்காக அரசு அதிகாரிகளையோ, ஆட்சியாளர்களையோ எங்கு வேண்டுமானாலும் சென்று சந்தித்துத் திட்டங்களைப் பெற எனது உடல் ஆரோக்கியமாக உள்ளது. எனவே எனது வாழ்நாள் உள்ள வரை கிராம மக்களுக்காகச் சேவையாற்றுவேன், என்று கூறினார்.